தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு அதி தீவிர கனமழை எச்சரிக்கை...!

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கிய நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், தென் தமிழகம் மற்றும் குமரி கடலை ஓட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையும் நிலவுவதாகக் கூறினார். இதனால் அடுத்த இரு நாட்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை, வேலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையோ, இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் எனறும் பாலச்சந்திரன் தெரிவித்தார். ரெட் அலர்ட் என்பது நிர்வாக ரீதியாக அறிவிக்கப்படுவது என்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.