தமிழக அரசு உத்தரவால் பெரும் பரபரப்பு: பள்ளிகளில் மத குழுக்கள் ஊடுருவல்?:

பள்ளிகளில் மதம் சார்ந்த கருத்துக்களை மாணவர்களிடம் பரப்பும் குழுக்கள் இருக்கிறதா என்று கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இடையே எந்த கருத்து வேறும்பாடும் இல்லாமல் பல்வேறு பண்பாடு மற்றும் சமயத்தை சார்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த சமயம் சார்ந்த கருத்து வேறுபாடுகள் மாணவர்கள் இடையே புகுத்தப்படுவதாக ஒரு செய்தி பரவி வருகிறது. அதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் கைகளில் பல்வேறு நிறத்தினாலான கயிறுகளை அணிந்து வந்தால், அது குறித்து எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சர்ச்சை அடங்கிய நிலையில் தற்போது, சில மாணவர் குழுக்கள் இந்து சமயம் தொடர்பான கருத்துகளை பரப்பி வருவதாக செய்தி வெளியானது. இது குறித்து கண்காணிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து கல்வி நிறுவனங்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அரசு தரப்பில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு வந்த கடிதத்தின் பேரில், பள்ளிக் கல்வித்துறையில் இருந்து ஒரு அவசர உத்தரவு அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் சென்றுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறையில் இருந்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்க கல்வித்துறை இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு இணைச் செயலாளர் வெங்கடேசன் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து மதத் தலைவர்கள் பற்றிய வரலாறு, நீதிக் கல்வி, சமய வழிபாடு, புராணங்கள், வீர காவியங்கள் ஆகியவை குறித்து இந்து இளைஞர் முன்னணி, இந்த மாணவர் முன்னணியை சேர்ந்தவர்கள் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பிரச்சாரம் செய்து வருவதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. மேலும், மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கல்லூரியில் படிக்கும் இந்து மாணவர்களிடம் இது குறித்து கலந்துரையாடியும் வருகின்றனர் என்றும் ெதரியவந்துள்ளது. தலா 10 பேர் கொண்டு குழுவினர் ஒவ்வொரு கல்லூரியிலும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்ெ்வாரு கல்லூரியில் படிக்கும் இந்த மாணவியர் யாராவது வேறு மதத்தினருடன் காதலில் ஈடுபட்டு இருந்தால் அதை தடுப்பதை நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் தகவல் வந்துள்ளது. இது போன்ற நடவடிக்கைள் பள்ளி, கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், விதிகளை மீறியதாக கருதப்படுவதுடன் அவற்றை கண்காணிக்க வேண்டும். மதம் சார்ந்த, சாதி மற்றும் சமயக்கோட்பாடுகள் உள்ளடக்கிய நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். அப்படி ஏதாவது நடந்தால் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அது தொடர்பாக உடனடியாக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் இணைச் செயலாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு வெளியானது குறித்து நேற்று காலை முதலே பரபரப்பு ஏற்பட்டது. இது போன்ற ஒரு உத்தரவு பள்ளிக் கல்வித்துறையின் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு செல்லவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார். அதேநேரம் இந்த அரசு உத்தரவு எப்படி வெளியானது என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் நேற்று பெரும் விவாதம் கிளம்பியது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரியை அமைச்சர்கள் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் மறுப்பு விளையாட்டுத் துறையை மேம்படுத்துவது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு விளையாட்டு சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிகளில் மத ரீதியாக மாணவர்கள் குழு அமைத்துள்ள பிரச்னை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மூலம் எந்த கடிதமும் பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. பள்ளிக்கல்வித்துறை அனுப்பினால் மட்டுமே முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் அந்த உத்தரவை பின்பற்ற வேண்டும். பள்ளிக் கல்வித்துறை மூலம் எந்த சுற்றறிக்கை அனுப்பினாலும் அது முதல்வரின் ஒப்புதல் இல்லாமல் வெளி வராது.