போலி நகைகளை அடகு வைத்து 2 லட்சம் ரூபாயை சுருட்டிச் சென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி ஓ.எம்.ஆர் சாலையில் ஐ.டி.பி.ஐ எனப்படும் தனியார் வங்கி இயங்கி வருகிறது. கடந்த வருடம் இந்த வங்கியில் 10 சவரன் நகையை அடகு வைத்து 2 லட்ச ரூபாயை மர்ம நபர் ஒருவர் பெற்றுச்சென்றுள்ளார். நீண்ட நாட்களாக நகைக்கு வட்டி செலுத்தாததால் வங்கி தரப்பில் நகைகளை ஏலம் விடப்போவதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கும் உரிய பதில் இல்லாததால் நகையை ஏலத்தில் விற்க வங்கி தரப்பு முடிவு செய்துள்ளது. அப்போது அந்த நகைகளை வங்கி ஊழியர்கள் சோதனை செய்ததில் தங்க மூலாம் பூசப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள், போலி முகவரியை வழங்கி 2 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை மோசடிக்கு ஊழியர்கள் யாரும் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.