மணப்பாறை அருகே ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கொத்தனாரான அவரது இரண்டாவது மகன் சுஜித் வில்சன் வீட்டிற்கு அருகே உள்ள சோளக்காட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். சோளப்பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில், அங்கு 25 அடி ஆழத்திற்கு தோண்டி, பயன்படுத்தபடாமல் உள்ள ஆழ்குழாய் கிணறு ஒன்று திறந்த நிலையில் உள்ளது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வில்சன், எதிர்பாரதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதை கண்டு பதறிப்போன அவனது பெற்றோர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து குழந்தையை மீட்க முயன்றனர். இரண்டு வயது குழந்தையான சுஜித் வில்சன், கிணற்றுக்குள் அமர்ந்த நிலையில், தலைக்கு மேல் கைகளை வைத்த நிலையில் உள்ளான். அவன் ஆழ்குழாய் கிணற்றில் சிக்கி உள்ள தகவல் அறிந்ததும். போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்தனர். அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம், அந்த கிணற்றுக்கு அருகில் மண்ணை தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தை கிணற்றுக்குள் சிக்கி இருந்தாலும், நல்ல நினைவோடு உள்ளதாகவும், காற்று இன்றி மயங்கும் நிலைக்கு செல்ல வில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.