சமூக வலைதளங்களை கட்டுபடுத்துவதற்கான புதிய விதிமுறைகளை ஜனவரி 15ம் தேதிக்குள் இறுதி செய்யும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் மூலமாக பொய் செய்திகள், அவதூறு தகவல்கள் மற்றும் ஆபாச படங்கள், தேச விரோத செயல்கள் போன்றவை பரப்பப்படுவது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற கிரிமினல் வழக்குகளில், சர்ச்சைக்குரிய தகவல்களை யார் அனுப்பியது என்ற விவரத்தை தெரிவிக்கும்படி சமூக இணையதள நிறுவனங்களிடம், போலீசார் கேட்டு வருகின்றனர். ஆனால், தனிநபர் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த விபரங்களை சமூகவலைதள நிறுவனங்கள் கொடுக்க மறுத்து வருகின்றன. இதனால், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சமூகவலைதளங்களுடன் அவற்றை பயன்படுத்துவோரின் ஆதார் எண்களை இணைக்கக் கோரி தமிழகம் உள்ளிட பல்வேறு மாநில அரசுகள் உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளன. இந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ள வாட்சப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள், ஒவ்வொரு மாநிலங்களிலும் சமூக வலைதளங்கள் தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் மீது, ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றமும், வெவ்வேறு கருத்துகளை தெரிவிப்பதால் அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றமே விசாரணை செய்ய வேண்டும் என்று ஃபேஸ்புக் மனு அளித்திருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, சமூகவலைதளங்கள் மூலம் வன்முறை பேச்சுகள், பொய் செய்திகளை பரப்புதல், அவதூறு தகவல்கள் வெளியிடுதல் மற்றும் தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கான புதிய விதிமுறைகள் ஜனவரி 15ம் தேதிக்குள் இறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும் என்ற சமூக வலைதளங்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள், அரசுக்கு தேவைப்பட்டால் என்க்ரிப்ட் செய்யப்பட்ட தகவல்களை டிக்ரிப்ட் செய்து தர வேண்டும் என்று தெரிவித்தார். அதோடு, வாட்சப் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை இந்தியாவிற்குள் வந்துவிட்டபின்பு தகவல்களை டிக்ரிப்ட் செய்து தரமுடியாது என்று சொல்ல முடியாது என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்திருந்த வாட்சப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள், தகவல்களை டிக்ரிப்ட் செய்வதற்கான தொழில்நுட்பம் தங்களிடம் இல்லை என்றும், அவர்களால் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு மட்டுமே தரமுடியும் என்று தெரிவித்திருந்தன. ஃபேஸ்புக் மற்றும் வாட்சப் நிறுவனங்களின் கருத்துக்கு பதிலளித்த நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருதா போஸ் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, வீட்டு உரிமையாளரிடமிருந்து, வீட்டின் சாவியை அரசு கேட்கிறது. ஆனால் சாவி தன்னிடம் இல்லை வீட்டு உரிமையாளர் மறுக்கிறார் என்று தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, மும்பை, மத்திய பிரதேச உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் சமூக வலைதளங்கள் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என்று அறிவித்துள்ளதோடு, சமூக வலைதளங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜனவரி மாத இறுதியில் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!