டிபன் கடையைச் சேதப்படுத்திய இன்ஸ்பெக்டர்: நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸ் வழக்குப் பதிவு

சாலையோர தள்ளுவண்டிக் கடையை தனிப்பட்ட விரோதம் காரணமாக போலீஸாருடன் வந்து அடித்து உடைத்த பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி அதே காவல் நிலையத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பெரியமேடு காட்டூர் சடையப்பன் தெருவில் வசிப்பவர் சர்ப்ராஸ் அகமது (23). இவர் வேலையில்லாமல் இருந்ததால் தள்ளுவண்டி மூலம் பெரியமேடு பகுதியில் சிக்கன் பக்கோடா வியாபாரம் செய்து வந்தார். தினமும் இரவு வியாபாரம் முடிந்ததும் தள்ளுவண்டியைத் தனது வீட்டுக்கு அருகில் உள்ள சாமி தெருவில் சாலையின் ஓரமாக இரும்புச் சங்கிலி போட்டு கட்டி நிறுத்துவார். இந்நிலையில் பெரியமேடு காவல் ஆய்வாளர் சிவராஜன் தனது போலீஸாருடன் கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி இரவு சாமி தெருவுக்கு வந்தவர் போலீஸாருடன் சேர்ந்து தள்ளுவண்டியைச் சேதப்படுத்தினார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. தனது போலீஸாருடன் வரும் இன்ஸ்பெக்டர் சிவராஜன், தள்ளுவண்டியை இழுத்து கீழே தள்ளி உடைக்கலாம் என பார்த்தார். ஆனால் வண்டி அங்குள்ள விளக்குக் கம்பத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்ததால் அவரால் இழுத்து கீழே தள்ள முடியவில்லை. இதையடுத்து போலீஸார் வண்டியை உடைக்க சிவராஜனுக்கு உதவினர். பின்னர் இன்ஸ்பெக்டர் சிவராஜன் நேரடியாகக் களம் இறங்கி தள்ளுவண்டியின் பக்கவாட்டு கட்டையைப் பிடித்து தொங்கி உடைக்க முயன்றார். பின்னர் போலீஸார் கொடுத்த பெரிய கட்டைத் துண்டு போன்ற ஒன்றைவைத்து உடைக்க முயன்றதில் வாகனம் சேதமடைந்தது. இந்தக் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. மறுநாள் காலையில் சாமி தெருவுக்கு வந்த சர்ப்ராஸ் அகமது தனது வண்டியை உடைத்து சேதப்படுத்தி இருப்பதைக் கண்டு தடுமாறி நின்றார். பக்கத்தில் உள்ள கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியைப் பார்த்து சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ்தான் தனது தள்ளுவண்டியைச் சேதப்படுத்தியது எனத் தெரிந்துகொண்டார். இதுகுறித்து 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் சர்ப்ராஸ் அகமது வழக்குத் தொடர்ந்தார். தனது வண்டியை போலீஸாருடன் சேர்ந்து சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சிவராஜன் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை இணைத்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் தொடரப்பட்ட வழக்கில். பலகட்ட விசாரணைக்குப் பின் கடந்த செப்டம்பர் மாதம் பெரியமேடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சிவராஜன் மீது பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் (us/ 3 TNPPDL Act) பிரிவின் கீழ் வழக்குத் தொடர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்குள் அவர் குரோம்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளராக மாற்றப்பட்டிருந்தார். தற்போதைய பெரியமேடு ஆய்வாளரை வழக்கில் சேர்த்துள்ள குற்றவியல் நீதிமன்றம், இன்ஸ்பெக்டர் சிவராஜன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவராஜன் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)