ஓம் பிர்லா பயணித்த ரயில் பெட்டியில் குடித்து விட்டு 5 பேர் ரகளை

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பயணம் செய்த ரயில் பெட்டியில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தில்லியிலுள்ள ஹஜ்ரத் நிஜாமுதீன் ((Hazrat Nizamuddin)) பகுதியில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலிலுள்ள ஏசி முதல் வகுப்புப் பெட்டியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு பயணித்தார். அந்த ரயில் பெட்டியில் ஏறிய சிலர், அதனுள் வைத்து மது அருந்தியுள்ளனர். பின்னர் மதுபோதையில் ரகளை செய்தனர். இதுகுறித்து விசாரிக்கும்படி தனது உதவியாளர் ராகவேந்திராவை ஓம் பிர்லா அனுப்பி வைத்துள்ளார். அப்போது அவரிடமும் அந்த நபர்கள், தகராறு செய்தனர். இதையடுத்து ஓம் பிர்லா அறிவுறுத்தியதன் பேரில், ரயில்வே போலீஸாருக்கு அவரது உதவியாளர் ராகவேந்திரா தகவல் கொடுத்தார். அந்த ரயில், உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மதுரா ரயில் நிலையத்தை நள்ளிரவு 1 மணியளவில் வந்தடைந்தது. அப்போது குடித்துவிட்டு தகராறு செய்த 5 பேரையும் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். ஏசி முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து மதுபாட்டில்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். அவர்களில் 3 பேர் டெல்லியைச் சேர்ந்த விகாஸ் தாகர், ராஜீவ், மனோஜ் குமார் என்பதும், எஞ்சிய 2 பேர் குர்காணைச் சேர்ந்த பிரீதம், அமர்ஜித் சிங் என்பதும் தெரிந்தது. அவர்கள் மீது ரயில்களில் குடிபோதையில் தகராறில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும், ரயில்வே சட்டத்தின் 145ஆவது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)