அதிமுக 61 கோடி வசூல் : இந்திய தேர்தல் ஆணையத்திடம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்காக அதிமுக ரூ.61 கோடி வசூலித்துள்ளதாக, அதில் ரூ.20 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி அறிக்கை அளித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது எவ்வளவு வசூலித்தனர், எவ்வளவு செலவு செய்தனர் என்ற முழு விவரங்களை அதிமுக தலைமை சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதமே இந்த அறிக்கை அளிக்கப்பட்டாலும் தற்போதுதான், தேர்தலுக்காக அதிமுக எவ்வளவு செலவு செய்தது என்ற தகவலை தேர்தல் ஆணையம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதிமுக தாக்கல் செய்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: தமிழகத்தில் மக்களவை தேர்தல் அறிவித்தபோது அதிமுக கட்சியிடம் ஒரு லட்சத்து, 18,919 ரொக்கப்பணம் இருந்தது. அதைத் தவிர ஏழு வங்கிகளில் 191 கோடியே 91 லட்சத்து 32 ஆயிரத்து 103 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. அதைத் தவிர தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியாரிடம் இருந்து ரொக்கப் பணமாக ஒரு கோடியே 19 லட்சத்து 31 ஆயிரத்து 835 நன்கொடை வந்தது. செக் மற்றும் டிடி(டிமான்ட் டிராப்ட்)யாக ரூ.60 கோடியே 62 லட்சத்து, 86 ஆயிரத்து 276 நன்கொடை வந்தது. மக்களவை தேர்தலுக்காக மட்டும் ரூ.19,95,43,741 செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர பேச்சாளர்களுக்கு ரூ.72,43,000 செலவு செய்யப்பட்டதாகவும், மற்ற தலைவர்களுக்கு தேர்தல் போக்குவரத்துக்காக ரூ.5,87,128 செலவு செய்யப்பட்டது. இணையதளம், எஸ்எம்எஸ், டிவி விளம்பரத்துக்காக ரூ.19,11,89,620ம், போஸ்டர், பேனர், கொடி, ஸ்டிக்கர் உள்ளிட்ட செலவுக்காக ரூ.3,09,867ம், இதரவு செலவுகளாக ரூ.2,14,126 செலவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி சில வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் இருந்ததால் அதற்கான விளம்பரத்துக்காக ரூ.8,26,800 செலவு செய்யப்பட்டது. தேர்தல் செலவுகள் போக, மக்களவை தேர்தல் முடிந்த பிறகு அதிமுக கட்சியிடம் தற்போது 232 கோடியே 20 லட்சத்து, 4 ஆயிரத்து 543 ரூபாய் வங்கியில் கையிருப்பு உள்ளது. கட்சியின் மூத்த தலைவர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், சம்பத் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் என்று 34 பேர் சரியாக ஒரு லட்சத்து 94 ஆயிரம் மட்டுமே செலவு செய்துள்ளதாகவும் ஒருவர் கூட, அதிகமாகவோ, குறைவாகவோ செலவு செய்யவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமானத்தில் செல்ல ரூ.2,47, 896ம், தனிப்பட்ட சுற்றுப் பயண செலவாக ரூ.2,51,500ம் செலவு செய்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.87, 732 மட்டுமே செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து, உணவு, டீசல் செலவாக 31, 226ம், டீ, நொறுக்குத் தீனிசக்கு ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 900 செலவு செய்துள்ளதாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட மக்களவை தேர்தல் செலவு அறிக்கையில் கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுத்ததாக எந்த தகவலும் இடம்பெறவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்