கலப்பட நெய் விற்பனை அமோகம்: அதிகாரிகள் உடந்தை,.. மக்கள் குற்றச்சாட்டு

தாம்பரம் நகராட்சியில் மொத்தம் உள்ள 39 வார்டுகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் 5வது வார்டில் உள்ள 1வது தெரு, 2வது தெரு, 7வது வார்டில் உள்ள 4வது தெரு உள்ளிட்ட இடங்களில் தனியார் நெய் விற்பனை செய்யும் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடையில் இருந்து தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகள், மார்க்கெட் பகுதியில் உள்ள மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் என நெய் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் நெய்யில் பாமாயில், வனஸ்பதி மற்றும் ரசாயன மூலக்கூறுகளை கலந்து கலப்பட நெய்யாக தயார் செய்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் தாம்பரம் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விமலேஸ்வரனிடம் புகார் அளித்தால் அவர் அலட்சியம் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக நெய் வாங்குவது வழக்கம். ஆனால் இவ்வாறு வாங்கப்படும் நெய்யில் பெரும்பாலும் கலப்படங்களாக உள்ளது. இதில் குறிப்பாக மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள 1, 2, 4 ஆகிய தெருக்களில் இயங்கி வரும் நெய் கடைகளில் கலப்பட நெய் தயாரித்து தாம்பரம் மார்க்கெட்டில் உள்ள மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். அதுமட்டும் இன்றி இதுபோன்ற கலப்பட நெய்யை விற்பனை செய்வதற்கென்று வெளியூர்களில் இருந்து சிலரை வரவழைத்து அவர்களிடம் ஒரு பக்கெட்டில் மூலக்கூறுகளை கொடுத்து அனுப்புகின்றனர். அவர்கள் அந்த மூலக்கூறுகளை வீட்டிற்கு கொண்டு சென்று அதன் மூலம் கலப்பட நெய்யை தயார் செய்து ஒவ்வொரு தெருவாக பொதுமக்களிடம் விற்பனை செய்கின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் சார்பில் தாம்பரம் நகராட்சியில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரி விமலேஸ்வரனிடம் பல முறை புகார் அளித்தும் அவர் எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி அனுராதா தலைமையில் அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்மந்தப்பட்ட கடைகளில் திடீர் சோதனை செய்து அங்கு கலப்பட நெய் தயாரிப்பதை கண்டுபிடித்தனர். மேலும் அந்த கடைகளுக்கு சீல் வைத்துவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் சென்ற சிலமணி நேரத்தில் மீண்டும் அந்த கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற கலப்பட நெய்யை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால் பொதுமக்கள் உடல் நிலை பாதிக்கும் அபாயம் ஏற்படுகின்றது. எனவே இதுகுறித்து உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்