படம் தோற்றுவிட்டது என்றால் காமெடியனும் தோற்றுவிடுகிறான்- நடிகர் சூரி உருக்கம்

'நம்ம வீட்டுப் பிள்ளை', 'சங்கத்தமிழன்', 'கொம்புவச்ச சிங்கம்டா', 'சர்பத்', விமலுடன் ஒரு படம், சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 2 படங்கள், இரா.சரவணன் மற்றும் பிரபாகரன் இயக்கவுள்ள படங்கள் என சூரியின் கால்ஷீட் தேதிகள் நிறைந்து வழிகின்றன. அவருடன் உரையாடியதில் இருந்து.. திடீரென்று நாயகன் ஆகிவிட்டீர்களே..? பல முன்னணி இயக்குநர்கள் ஹீரோவாக நடிக்கச் சொல்லி கதை சொல்லியிருக்காங்க. அப்போதெல்லாம், நமக்கு எதுக்கு இந்த வேலை என வேண்டாம்னு சொல்லிட்டேன். வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் நடித்துவிட மாட்டோமா என நிறைய நடிகர்கள் ஏங்கிட்டு இருக்காங்க. இந்தச் சூழலில்தான் அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வந்தது. அந்த வாய்ப்பையும் மறுத்தால், என்னைவிட முட்டாள் யாரும் இருக்க முடியாது. அவரிடம் ஒரு வரி கதை மட்டுமே கேட்டேன். செம கதை. அதில் நான் ஹீரோவா என்றால்.. இல்லை. வெற்றிமாறன் படத்தில் அவர்தான் முதல் ஹீரோ. அவரதுகதை இன்னொரு ஹீரோ. அதில் நான் நடிக்கிறேன் அவ்வளவுதான். அவரதுகைகளில் களிமண்ணை கொடுத்திருக்கிறேன். அவர் அதைக் கொண்டு யானை செய்கிறாரோ, குதிரை செய்கிறாரோ.. எனக்குத் தெரியாது! இனிமேல் நிரந்தரமாக ஹீரோதானா? வேறு மொழிகளில் ஏன் நடிப்பதில்லை? எப்போதுமே எனக்கு காமெடிதான் முக்கியம். அப்படி இருந்தால்தான் தினமும் சட்டியில் சோறு வேகும். மற்ற நடிகர்கள் எந்த மொழியிலும் நடித்துவிடலாம். காமெடி நடிகர்களால் முடியாது. அந்த விஷயத்தில் கோவை சரளா அக்காவுக்கு பெரிய சல்யூட்! நீங்கள் ஹீரோவாக நடிக்கவுள்ளது பற்றி மற்ற ஹீரோக்கள் என்ன சொன்னார்கள்? ஹீரோ ஆக வேண்டாம் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தது தம்பி சிவகார்த்திகேயன்தான். அவரிடம் நான் வெற்றிமாறன் படத்தில் நடிப்பது பற்றி மெதுவாக சொல்ல ஆரம்பிக்கும் போதே, 'இதை விடக்கூடாதண்ணே. வெற்றி எங்களுக்கு வேறொரு சூரியை காட்டுவார். அது ஒரு பட்டறை. தவிர்க்க வேண்டாம்ணே' என்று ரொம்ப உற்சாகத்துடன் சிவா கைகொடுத்தார். திடீரென்று ஓட்டல் வியாபாரத்தில் கால் பதிக்கக் காரணம்? வாழ்க்கையில் வெற்றி அடைந்ததும், 'சாப்பாட்டுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டேல்ல.. நாம ஏன் ஓட்டல் வைக்கக் கூடாது. கம்மி விலையில் நல்ல சாப்பாடு கொடுப்போம்' என்று அண்ணன்கள் கேட்டார்கள். அம்மாவும் அதையே சொன்னார். அப்படி ஆரம்பித்த 'அம்மன் ஓட்டல்' மதுரையில் இப்போ நம்பர் ஒன். அதற்குக் காரணம் என் அண்ணன்களும் அவர்களது அயராத உழைப்பும்தான்! நீங்கள் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருப்பதன் ரகசியம் என்ன? 'புஷ்பா புருஷன்' காமெடியில் மாட்டினேனே.. அது ஒன்னு போதாதா? படம் பார்க்குறப்போ அந்த காமெடிக்கு பலரும் சிரித்தார்கள். ஆனால், அது படத்தைத் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. சென்னையில் இருந்தால் ஆஞ்சநேயர் கோயிலுக்கு அடிக்கடி போவேன். என் மனைவியும் கூட வருவாங்க. சாமிகும்பிட்டுவிட்டு கோயிலைச் சுத்தி வரும்போது, 'புஷ்பா புருஷன் போறார் பார்..' என்று என் காதுபடவே கமென்ட் அடித்திருக்கிறார்கள். கோயில்னுகூட பார்க்காமல் இப்படி அந்த காமெடி துரத்தியிருக்கு. கட்சிகளுக்குப் பிரச்சாரம் செய்வதை காமெடி நடிகர்கள் வழக்கமா வெச்சிருக்காங்க. நீங்கள்..? நடிப்பதில் நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. சினிமா ஏரியாவில் மட்டும்தான் நமக்கு வேலை இருக்கு. வேறு எங்கும் வேலையில்லை. யாரையும் எதிர்த்துப் பேசி எனக்குப் பழக்கம் இல்லை. அது என் தனி குணம். எனக்கு என்றைக்கும் அரசியல் சரிபட்டே வராது. இன்று டிராக் காமெடிக்கு வேலையே இல்லை. இது காமெடி கலைஞர்களுக்கு பின்னடைவா..? காமெடிக்கு தனி டிராக் இருக்கும்போது காமெடி நடிகர்கள் கொடிகட்டிப் பறந்தது உண்மைதான். அது ஒரு பொற்காலம். அப்போதெல்லாம் அந்தப் படங்களின் வெற்றி - தோல்வி அதில் நடித்த காமெடியன்களை பாதிக்கவே இல்லை. அப்போதெல்லாம் காமெடி நடிகர்களிடம் 5 நாட்களுக்கு மொத்தமாக தேதி வாங்கி, காமெடிக்கு என்று தனியாக ஒரு டிராக் எடுத்து, படம் முழுக்க வருவதுபோல ஒட்டவைத்துவிடுவார்கள். இன்றைக்கு அப்படியல்ல. மண்டையைக் கசக்கி 20 பஞ்ச் வசனங்கள் பேசுவோம். வீட்டுக்குப் போகும்போது 'இதுக்கு மக்கள் சிரிப்பாங்களா? மாட்டாங்களா..' என்று தோன்றிக்கொண்டே இருக்கும். அன்றைய நாளில் காமெடி நடிகர்கள் வருஷத்துக்கு நிறைய படங்கள் நடித்தார்கள். இன்று 10 படங்களுக்கு மேல் நடிக்க முடியவில்லை. இன்று ஹீரோவுக்கு 50 நாட்கள் கால்ஷீட் என்றால், காமெடியனுக்கு 45 நாட்கள் கால்ஷீட். ஹீரோவுடன் படம் முழுக்கவரவேண்டி இருப்பதால் சில இடங்களில்தான் காமெடி பண்ண முடியும். சோகமான காட்சி என்றால் காமெடியனும் சோகமாகத்தான் இருக்கணும். அன்றைக்கு ஒரு படம் படுத்திருந்தாலும், அதில் வந்த காமெடி ஒளி வீசி சுற்றிச் சுற்றி வரும். இன்று ஒரு படம் தோற்றுவிட்டது என்றால், அதில் நடித்த காமெடியனும் தோற்றுவிடுகிறான்!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்