அமைச்சர் தரப்பு மிரட்டியது!- உயிரை மாய்க்க முயன்ற போக்குவரத்து இன்ஸ்பெக்டர், கனி

. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவந்தவர், கனி (54). கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவர் வைத்திருந்த கடையை இன்ஸ்பெக்டர் கனி அப்புறப்படுத்த முயன்றார். இந்த விவகாரம் தொடர்பாக, அரக்கோணம் அ.தி.மு.க நகரச் செயலாளர் பாண்டுரங்கனுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. காவல்துறை உயரதிகாரிகளுக்கு அமைச்சர் ஒருவரின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதால், சமீபத்தில் இன்ஸ்பெக்டர் கனி வேலூர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மன உளைச்சலால் விரக்தியிலிருந்த இன்ஸ்பெக்டர் கனி, உயரதிகாரிகளிடம் விடுமுறை கேட்டுள்ளார். விடுமுறை கிடைக்காததால், இரண்டு தினங்களுக்கு முன்பு வேலூரில் அவர் தங்கியிருந்த காவலர் குடியிருப்பில் விஷம் குடித்தார். உயிருக்குப் போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆளுங்கட்சியினரின் மிரட்டலுக்கு உயரதிகாரிகள் அடிபணிந்து, இன்ஸ்பெக்டருக்கு இந்த நிலையை ஏற்படுத்திவிட்டதாகக் காவல்துறையினரிடம் பேச்சு அடிபடுகிறது. புகாருக்குள்ளான அரக்கோணம் அ.தி.மு.க நகரச் செயலாளர் பாண்டுரங்கனிடம் பேசினோம். ``அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயலவில்லை என்று காவல்துறை உயரதிகாரிகளே கூறுகிறார்கள். அரக்கோணத்தில் ஆட்டோ ஸ்டாண்டுக்கு எதிரே என்னுடைய கட்சிக்காரர் ஒரு இட்லிக் கடை வைத்தார். அங்கு, மொத்தம் மூன்று கடைகள் உள்ளன. என் கட்சிக்காரரின் கடையை மட்டும் எடுக்கச் சொல்லி மிரட்டல் விடுத்தார் அந்த இன்ஸ்பெக்டர் என்னையும் மிரட்டுகிறார் என்று நான் அமைச்சரிடம் சொன்னேன். பொதுமக்களிடம் இன்ஸ்பெக்டர் நடந்துகொள்ளும் விதம் சரியில்லை. காரில் உட்கார்ந்துகிட்டே விசாரணை நடத்துவார். வியாபாரிகளைத் துன்புறுத்துவார். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. அந்த இன்ஸ்பெக்டர்மீது அரக்கோணத்தில் பல்வேறு புகார்கள் உள்ளன. வாயைத் திறந்தாலே ஆபாசமாகப் பேசுவார். அவர் மீதான புகாரால் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக, ஒரு நாள் கழித்தே எங்களுக்குத் தெரியும். ஆளும்கட்சி மீதும் என் மீதும் பொய்யான தகவல்களை வேண்டுமென்றே பரப்புகிறார்கள்'' என்றார். காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் கனி, மிகவும் நேர்மையானவர். அரசியல்வாதிகள் தேவையில்லாமல் காவல்துறை பணியில் இடையூறு ஏற்படுத்துகிறார்கள். போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய கடையைத்தான் கனி அகற்றக் கோரினார். அந்தக் கடையின் உரிமையாளர் ஆளும் கட்சியா, எதிர்க்கட்சியா என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளே அமைதியாக இருக்கிறார்கள். இப்படியிருக்க, மக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கப்போகிறது'' என்றார் வேதனையோடு. இந்த விவகாரம் தொடர்பாக, வேலூர் வடக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்