ஒரே நாளில் சிக்கிய 19 போலி மருத்துவர்கள்..!

வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து 35 குழுக்களாகப் பிரிந்து நடத்திய சோதனையில் 19 போலி மருத்துவர்கள் சிக்கினர். வேலூர் மாவட்டம் முழுவதும், போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன. மருத்துவர்களிடம் உதவியாளராக இருப்பவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் ஆகியோர் தங்களது வீடுகளில் கிளினிக் வைத்தும், தனியாக கிளினிக் நடத்தியும் மருத்துவம் பார்த்து வருவதாகவும் புகார்கள் குவிந்தன. 10ஆம் வகுப்பைக் கூட நிறைவு செய்யாத பலர் போலி மருத்துவம் செய்து, பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழவே, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் யாஸ்மின் ஆகியோரது தலைமையில், மருத்துவர், காவல் உதவி ஆய்வாளர், சார்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய 35 குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக சோதனை மேற்கொண்டன. 100க்கும் மேற்பட்ட இடங்களில் அந்தக் குழுக்கள் நடத்திய சோதனையில், திருப்பத்தூரைச் சேர்ந்த குலசேகரன், சத்யநாராயணன், மாது, வெங்கடேசன், அச்சுதன் வாணியம்பாடியைச் சேர்ந்த யுவராஜ், மோகன்ராஜ், சண்முகசுந்தரம், மேல்பட்டியைச் சேர்ந்த குப்புசாமி பரதராமி பகுதியை சேர்ந்த ரமணா, ஸ்ரீநிவாசலு, துரைசாமி , சுரேஷ்குமார், சுமைதாங்கி ஜெயபால், சோளிங்கர் பிரபு பனப்பாக்கம் அருள்தாஸ் ஆகிய 19 போலி மருத்துவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 10க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுவதால் அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்களின் கிளினிக்குகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. கிளினிக்குகளில் இருந்த மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து பேசிய மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் யாஸ்மின், தொடர்ந்து கண்காணித்து தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும், மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் முழுவதுமாக களையெடுக்கப்படுவார்கள் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். போலி மருத்துவர்களிடம் இருந்து பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அரசின் அங்கீகாரம் பெற்ற மருத்துவர் தானா என்பதை உறுதி செய்த பின்னரே சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று யாஸ்மின் அறிவுறுத்தியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்