கண்கலங்கிய சிவன்- ஆறுதல் கூறிய பிரதமர்

இந்தியாவின் வரலாற்றுச் சாதனை நிகழ்வாகக் கருதப்பட்ட `சந்திரயான் 2' நிலவின் தென் துருவத்தை நெருங்கும் வேளையில் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் லேண்டருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனினும் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பைப் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சந்திரயான் 2 நிகழ்வுகளை நேரடியாகப் பார்வையிட வந்த பிரதமர் மோடி, இன்று காலை 8 மணிக்கு சந்திரயான் 2 திட்டம் தொடர்பாக நாட்டு மக்கள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார். `பாரத் மாதாகி ஜே' என்ற முழக்கத்துடன் தன் உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, `இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. உங்களின் இந்த பெரிய முயற்சிக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். நண்பர்களே, கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள், சந்திரயான் 2-க்காக எவ்வளவு உழைத்தீர்கள், ரோவருடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை நான் நேரில் பார்த்துக்கொண்டிருந்தேன். உங்கள் மனநிலையை என்னால் உணர முடிந்தது. அதை உங்கள் கண்கள் நிறையவே வெளிப்படுத்தின. இந்தியாவுக்காகத்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். கடந்த சில மணி நேரங்களாக முழு தேசமும் மிகுந்த கவலையில் உள்ளது. நமது விஞ்ஞானிகள் அனைவரும் ஒற்றுமையுடன் நின்று விண்வெளி திட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளதை நினைத்து நான் உட்பட ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கிறோம். இன்று சந்திரயான் 2 நிலவில் கால்பதிக்கவில்லை. அதனால் இது நமது இறுதி கிடையாது. இதனால் நம் நிலவைத் தொடும் தீர்மானம் இன்னும் வலுப்பெற்றுள்ளது. இது நமக்கான பின்னடைவு இல்லை தொடக்கம். இன்று என்னால் பெருமையுடன் சொல்ல முடியும் உங்களின் முயற்சி மதிப்புக்குரியது. எங்கள் குழு கடினமாக உழைத்து வெகு தூரம் பயணித்தது. இந்த அனுபவம் எப்போதும் உங்களுடன் இருக்கும். இன்றிலிருந்து கற்றல் நம்மை வலுவாக்கி சிறப்பாக்கும். நமக்காக மிக விரைவில் ஒரு புதிய விடியலும், பிரகாசமும் காத்திருக்கிறது. அறிவியலில் தோல்வி என்பதே இல்லை. சோதனைகள் மற்றும் முயற்சிகள் மட்டுமே நிரந்தரம் நாம் விரைவில் புதிய உயரங்களை எட்டுவோம். நீங்கள் தேசிய முன்னேற்றத்துக்கு நம்பமுடியாத பங்களிப்பை வழங்கி விதிவிலக்கான தொழில் வல்லுநர்களாகத் திகழ்கிறீர்கள். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நிகராக அவர்களின் குடும்பத்தையும் நான் பாராட்ட நினைக்கிறேன். நீங்கள் இங்கு எத்தனை நாள்கள் இரவு பகலாக உழைக்கிறீர்கள் என எனக்குத் தெரியும். இதற்காகப் பல விஷயங்களைத் தியாகம் செய்த உங்கள் குடும்பத்துக்கும் அதே பாராட்டு சென்று சேர வேண்டும். ஒவ்வொரு நொடியும் நான் உங்களுடன் இருப்பேன், எப்போதும் இந்த தேசம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் எப்போதும் உங்கள் சிறந்தவற்றை மட்டுமே தருகிறீர்கள். இனிமேல்தான் நிறைய வாய்ப்புகள் உங்களுக்கு வரவுள்ளது. புதிய விஷயங்கள் கண்டுபிடிப்பதற்கு நிறைய உள்ளன. இதுவரை யாரும் முயற்சி செய்யாததை நீங்கள் செய்திருக்கிறீர்கள். நமது விண்வெளி திட்டத்தின் புதிய உச்சங்கள் இனிமேல்தான் வரவுள்ளன. நாட்டின் நம்ப முடியாத வளர்ச்சிக்குப் பணியாற்றியுள்ளீர்கள். குறிக்கோளைக் கடைசி வரை நெருங்கினீர்கள். நமது பயணம் மற்றும் அதற்கான உழைப்பைத் திரும்பிப் பார்த்தால் தற்போது நாம் பெற்றுள்ள வெற்றி போதுமானது. நிலவைத் தொடும் நம் முயற்சி நிச்சயம் வெற்றியடையும்” எனத் தெரிவித்துள்ளார். உரையைத் தொடர்ந்து அனைத்து விஞ்ஞானிகளுடனும் கை குலுக்கி ஆறுதல் தெரிவித்தார் பிரதமர். இறுதியாக இஸ்ரோ தலைவர் சிவனை சந்தித்து கைகுலுக்கினார் மோடி, அப்போது பிரதமரை பார்த்ததும் கண்ணீர்விட்டு அழுதார் சிவன். பின்னர் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி. இந்த சம்பவம் மொத்த இஸ்ரோ விஞ்ஞானிகளையும் கலங்கச் செய்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்