`கிறிஸ்துவ போதகர்களுக்கு மாதம் ரூ.5000'- ஜெகனின் புதிய உத்தரவை எதிர்க்கும் பா.ஜ.க!

ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றது முதல் பல புதிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதில் சில உத்தரவுகள் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்துவருகின்றன. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியை தலைநகராக அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டுவந்தார். ஆனால் புதிய அரசு அமைத்துள்ள ஜெகனோ, உலக வங்கி நிதி நிறுத்தியதை மேற்கோள்காட்டி அமராவதியை மாநிலத்தின் தலைநகராக அமைப்பதற்கான அனைத்து திட்டங்களையும் கைவிட்டு, அதற்குப் பதிலாக மாநிலத்தை உள்ளடக்கிய 4 பகுதிகளைத் தலைநகராக உருவாக்க முடிவு செய்துள்ளார். வடக்கு கடற்கரை மண்டலத்தைச் சேர்ந்த விஜயநகரம், கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா, தெற்கு கடலோரத்தில் உள்ள குண்டூர் மற்றும் கடப்பா ஆகிய நான்கு இடங்களும் தலைநகராக மாற்றுவதற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 4 தலைநகரங்களுக்கும் பிரதிநிதிகளாக, 5 துணை முதல்வர்களை இந்த ஆண்டுக்குள் ஜெகன்மோகன் ரெட்டி நியமிக்க உள்ளார். இதுபோல் சந்திரபாபு நாயுடுவுக்கான வீட்டை இடிக்க உத்தரவிட்டது உள்ளிட்ட அவரது சில நடவடிக்கைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தின. அந்தவகையில் ஜெகனின் மற்றொரு உத்தரவு சர்ச்சைகளை சந்தித்துவருகிறது. சமீபத்தில் சில அறிவிப்புகளை வெளியிட்டார் ஜெகன். அதில் ஒன்று கிறிஸ்துவ போதகர்களுக்கு மாதம்தோறும் ரூ.5,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு. தனது தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்துவர்களுக்கு உதவும் வகையில் போதகர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின்படியே தற்போது அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆந்திரா சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் இதற்கான சுற்றறிக்கையை மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி கிராம தொண்டர்கள் உதவியுடன் போதகர்கள் குறித்த சர்வே ஒன்றை எடுத்து 15 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சொல்லியிருக்கிறது. தற்போது இந்த அறிவிப்புக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ``ஆந்திர மக்களை மத அடிப்படையில் ஜெகன் அரசு பிரித்துவருகிறது. கிராமத் தொண்டர்களைப் பயன்படுத்தி போதகர்களைக் கண்டுபிடிப்பதற்காக கணக்கெடுப்பு நடத்துதல் மற்றும் போதகர்களுக்கு பணம் செலுத்துவதில் பொதுப் பணத்தை செலவிடுவது இழிவான செயல். இது அரசால் ஊக்குவிக்கப்படும் மத மாற்ற நடவடிக்கையாகும். ஒய்.எஸ்.ஆர் கட்சியின் இந்த நடவடிக்கையை பா.ஜ.க கடுமையாக கண்டிக்கிறது" எனக் கூறியுள்ளது. பா.ஜ.க ஜெகனின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இது முதல் முறையல்ல. இதற்குமுன்பு திருப்பதியில் ஜெருசலேம் யாத்திரை மற்றும் ஹஜ் யாத்திரை பற்றிய விளம்பரங்கள் வெளியானபோதும் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது எனக் கூறி கடும் அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. முன்னதாக, கோயில்களைப் பராமரிப்பதற்காக ரூ.10,000 முதல் ரூ.35,000 வரையிலும், இமாம்கள் மற்றும் மியூசின்களுக்கு மதிப்பூதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும் என்றும் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஜெகன், வாக்குறுதிகள் அனைத்தும் 2020 மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என்று ஏற்கெனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)