சென்னையில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 10,791 நபர்களிடம் ரூ.16 லட்சம் அபராதம் வசூலிப்பு: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்

சென்னையில் பயணசீட்டு இன்றி பயணித்த 10,791 பேரிடம் 16,80,850 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் தரப்பில் இருந்து இன்று ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் உரிய பயணசீட்டு இல்லாமலும், அதேபோல மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்டுள்ள பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்வது மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் அனைத்து மாநகர பேருந்துகளிலும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் அடிப்படையில், கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் 16,80,850 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பயணச்சீட்டு இல்லாமல் அல்லது பயண அட்டை இல்லாத நபர்களிடம் இருந்து ரூ.500 தொகை அதிகபட்ச அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 3,915 நபர்களிடம் இருந்து அபராத தொகையாக 6,00,850 ரூபாயும், ஜூன் மாதத்தில் 3,655 நபர்களிடம் இருந்து ரூ.5,24,100 அபராத தொகையையும், ஜூலை மாதத்தில் 3,218 நபர்களிடம் இருந்து ரூ.5,55,900 அபராத தொகையும் வசூலிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, போக்குவரத்து பயணிகளை பரிசோதிக்கும் பரிசோதகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்