டீக்கடைக்குள் புகுந்த பாம்பை பிடித்து அசத்திய ஆய்வாளர்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் சாம்சன், கடைக்குள் புகுந்த பாம்பு ஒன்றை தனது கையால் பிடித்து பத்திரமாக ஓடைக்குள் இறக்கி விட்ட காட்சி, சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் வீரவநல்லூர் காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரியும் சாம்சன், இதற்கு முற்றிலும் விதிவிலக்கானவராக தெரிகிறார். வீரவநல்லூர் அருகே உள்ள ரெட்டியார்புரம் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக பந்தோபஸ்து பணியில் அவர் ஈடுபட்டு கொண்டிருந்தார்.அப்போது அருகே உள்ள டீக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் பாம்பு ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த காவல் ஆய்வாளர் சாம்சன், டீக்கடைக்கு சென்று அங்கிருந்த பாம்பை தனது கையில் லாவகமாக பிடித்தார். பிறகு சிறிதும் அச்சமின்றி தனது கையில் பாம்பை தூக்கி வந்தார். அப்போது அந்த பாம்பு, சாம்சனின் தோள்பகுதி வழியாக தலை மீது ஏறி நின்றது. தலைமீது ஏறி பாம்பு நிற்பது குறித்து கவலைப்படாத காவல் ஆய்வாளர் சாம்சன், அதை பூமாலை போல போட்டுக் கொண்டு சிரித்தபடியே அங்கிருந்து மெதுவாக நகர்ந்தார். சிறிது தூரம் சென்ற அவர், அங்கிருந்த ஓடையில் பாம்பை இறக்கி விட நினைத்து தனது உடலை சாய்த்தார். இதை புரிந்து கொண்டது போல அந்தப் பாம்பும், சாம்சனின் உடலில் இருந்து மெதுவாக இறங்கி, அப்படியே ஓடைக்குள் சென்றது. பாம்பைக் கண்டு காவல் ஆய்வாளர் சாம்சன் அச்சப்படாததும், அதை தனது தோள்மீது மாலை போல் போட்டுக் கொண்டு, நடந்து வந்து ஓடையில் பத்திரமாக இறக்கி விட்டதும் அங்கிருந்த மக்களை மெய்சிலிர்க்க வைத்தது. இக்காட்சியை சிலர் தங்களது செல்லிடப்பேசியில் வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. காவல் ஆய்வாளர் சாம்சனுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்