மத்திய அரசிடம் நிதி பெறுவது சவாலாக உள்ளது: புதுவை முதல்வர் நாராயணசாமி பேச்சு

மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது சவாலாக மாறியுள்ளதாக புதுவை முதல்வர் வே.நாரயணசாமி தெரிவித்தார். புதுவை அரசு சார்பில் சுதந்திர தின விழா உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, மைதானம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. உப்பளம் மைதானத்துக்கு வந்த முதல்வர்  நாராயணசாமியை தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியேற்றினார். பின்னர், திறந்த ஜீப்பில் சென்று காவலர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்டார். தொடர்ந்து, விழா மேடைக்கு வந்து முதல்வர் நாராயணசாமி ஆற்றிய சுதந்திர தின உரை: ஒருபுறம் மத்திய அரசு புதுவைக்கு அளித்து வந்த மானியத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. மற்றொருபுறம் ஆண்டுதோறும் மத்திய அரசின் நிதியைப் பெறுவதென்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. இருப்பினும், புதுவை அரசு இந்த பிரச்னைகளை எல்லாம் தீவிரமாக எதிர்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறக்கூடிய வகையில் பல்வேறு மக்கள் நலப் பணிகளை சிறப்பாகச் செய்து வருகிறது. கடந்த 2018 - 19-ஆம் நிதியாண்டில் புதுவை மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கிய திருத்திய திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.7,416 கோடி. இதன் மூலம் பல மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, புதுவை யூனியன் பிரதேச மக்கள் தொகை 13 லட்சத்து 94 ஆயிரத்து 26 ஆகும். இதில், சுமார் 96 விழுக்காடு மக்கள் ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டுள்ளனர்.  பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், புதுச்சேரி பிராந்தியத்தில் 4,294.13 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்த 4,997 விவசாயிகளும், காரைக்கால் பிராந்தியத்தில் 4878.55 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்த 4,803 விவசாயிகளும், ஏனாம் பிராந்தியத்தில் 231.27 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்த 473 விவசாயிகளும் பயன்பெற பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியில் 400 ஹெக்டேரிலும், காரைக்காலில் 150 ஹெக்டேரிலும் இயற்கை வேளாண்மை நிறுவனங்களின் பங்களிப்புடன் இயற்கை வேளாண் முறைகளைச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுவரை தனியார் பங்களிப்புடன் புதுச்சேரி, காரைக்காலில் சுமார் 75 வகுப்பறைகள் பொலிவுறு வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. புதுச்சேரி பொறியியல் கல்லூரியை தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாற்ற மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. புதுவையில் 81 துணை மருத்துவ மையங்கள், 40 ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவற்றை சுகாதாரம் மற்றும் நல மையங்களாக மாற்றுவதோடு மட்டுமல்லாது, கிராமப்புற மருத்துவமனைகளுடன் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையை இணைத்து சிறப்பான காணொலி மருத்துவ வசதி ஏற்படுத்தப்படும். புதுச்சேரி பகுதியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், மாலை நேர வகுப்புகள் நிகழாண்டு தொடங்கப்படவுள்ளன. 2030-ஆம் ஆண்டுக்குள் மக்களின் சமூக பொருளாதாரத் தேவைகளைக் கணக்கில் கொண்டு, அனைத்துத்தரப்பு மக்களின் போக்குவரத்து தேவைகளை நிறைவு செய்ய புதிய போக்குவரத்துக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தேங்காய்த்திட்டில் ரூ.15.75 கோடியில் ஆய்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 10 புகழ்பெற்ற திருக்கோயில்களின் வரலாறு, பூஜைகள், திருவிழாக்கள், சிலைகள் ஆகியவற்றின் விரிவான தகவல்களைச் சேகரித்து அரசிடம் சமர்ப்பிக்க, புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி 21-இல் பணி ஆணை வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுவை மாநிலத்தில் உள்ள மசூதிகளின் பட்டியல் மற்றும் முழு விவரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்