செய்வினை என மோசடி - பணம் பறித்த 3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே வீட்டில் செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக கூறி பெண்ணைத் தந்திரமாக ஏமாற்றி பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்தூரை அடுத்துள்ள திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்ற ஒருவர், தன்னை சாமியார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பழனியம்மாளின் கையில் எலுமிச்சம் பழத்தை வைத்த அந்த நபர், அவரது நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து வாக்கு சொல்லியிருக்கிறார். அந்த நபர் கூறியது அனைத்தும் தனது குடும்பச் சூழலுக்கு ஒத்துப் போனதால், அவரை சக்தி வாய்ந்த உண்மையான சாமியார் என நினைத்து பய பக்தியோடு வணங்கியுள்ளார் பழனியம்மாள். பழனியம்மாளின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்ட அந்த போலி சாமியார், இந்த வீட்டில் செய்வினை இருப்பதாகவும், அதை எடுக்கவில்லை என்றால், பழனியம்மாளின் மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கூறியுள்ளார். வீட்டின் தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அதை யாரும் எடுக்கக் கூடாது என்பதற்காகவே செய்வினை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். செய்வினையை எடுத்துவிட்டால் புதையலை எடுத்து விடலாம் என்றும் மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது எனவும் போலி சாமியார் தெரிவித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய பழனியம்மாளும், செய்வினையை எடுப்பதற்காக முதலில் 10 ஆயிரமும் 2-வது முறையாக 50 ஆயிரமும் 3-வது முறை வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்து 45 ஆயிரம் ரூபாயும் வங்கி கணக்கு மூலம் போலி சாமியாருக்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகு போலி சாமியார் செய்வினை எடுக்க செல்லாத காரணத்தால் பழனியம்மாள் அலைகழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி பழனியம்மாளின் வீட்டிற்கு சென்ற போலி சாமியார், செய்வினையை எடுப்பதாக கூறி, நாகம் உள்ளிட்ட சிறிய அளவிலான சிலைகளை நடுவீட்டில் வைத்து பூஜைகள் செய்ய ஆயத்தம் ஆகியுள்ளார். அப்போது திடீரென தனது ஒருவரால் செய்வினையை எடுக்க முடியாது என்றும், மேலும் இரண்டு பேர் உதவிக்காக தேவைப்படுவர் எனக் கூறி, கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பழனியம்மாள், செய்வினை எடுத்த பிறகு பணம் தருவதாக கூறி சமாளித்துள்ளார். போலி சாமியார் உதவிக்காக இருவரை அழைத்து வர சென்ற நேரத்தில், மத்தூர் போலீசாருக்கு பழனியம்மாள் தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு காரில் வந்த போலி சாமியாரையும் அவருடன் இருந்த இருவரையும் மறைந்திருந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செய்வினை பெயரை பயன்படுத்தி பணம் பறித்தது கண்டுபிடிக்கப்பட்டது. முக்கிய நபராக கருதப்படுவர் பென்னாகரத்தைச் சேர்ந்த போலி சாமியார் சுரேஷ் என்பதும், ஈச்சம்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் குமாரபாளையத்தைச் சேர்ந்த சிவா ஆகியோர் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்துள்ளது. ஜோதிடர் என்ற போர்வையில் வீடு தேடி வரும் முன்பின் தெரியாத நபர்கள் கூறும் கட்டுக்கதைகளை நம்பி, அவர்களை வீட்டிற்குள் அனுமதித்தால், இது போல தேவையின்றி பணத்தை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் போலீசார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்