வீரவநல்லூரில் சாதி சான்றிதழ் கிடைக்காமல் படிப்பை பாதியில் நிறுத்தும் பழங்குடியின மாணவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட சர்ச் தெரு, பொத்தை, பாரதிநகர் மற்றும் புதுக்குடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 100 குடும்பத்திற்கும் மேற்பட்ட இந்து காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உத்தரவுகள் (திருத்தப்பட்ட) சட்டம் 1976, வரிசை எண் 9ன்படி இவர்கள் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்களாவர். இவர்களுக்கு நெல்லை மாவட்டம் பேட்டை, தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பகுதியில் வருவாய்துறை மூலம் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வீரவநல்லூர் பகுதியில் 3 தலைமுறைகளாக வசித்து வரும் இச்சமூக மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக சாதி சான்றிதழ் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவ, மாணவியர் பள்ளி படிப்பை பாதியிலே நிறுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இச்சமூகத்தை சேர்ந்த 95 சதவீதத்தினர் கூலி வேலை மற்றும் கொத்தடிமைகளாக பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர். போதிய வருமானம் இல்லாத நிலையில் இவர்களது குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர சாதி சான்றிதழ் இல்லாததால் மேற்படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசு மூலம் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் சாதி சான்றிதழ் மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது வேதனையளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.சாதி சான்றிதழ் இல்லாததால் பள்ளி, கல்லூரிகளில் ஸ்காலர்சிப், வேலை வாய்ப்பில் முன்னுரிமை மற்றும் அரசின் பல்வேறு சலுகைகளும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் நெல்லை கலெக்டர் அலுவலகம் மற்றும் சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இவர்கள் விரக்தியில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வீரவநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் இந்து காட்டுநாயக்கர் சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் கிடைக்க வழி வகை செய்யவேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)