அத்திவரதர் தரிசனத்தில் பணியாற்றிய அனைத்து துறை ஊழியர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம், கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31-ந்தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் கடந்த 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து அத்திவரதரை தரிசித்தனர். அத்திவரதரை சயன கோலத்தில் 43 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடைசி மற்றும் 47-வது நாளான நேற்று அத்திவரதருக்கு ரோஜா மற்றும் மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 5.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு கடைசி நாள் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலித்தார். நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜை தொடங்குகிறது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்படுகிறது. இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. குளத்தில் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும். அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்படும். அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ம் ஆண்டு மீண்டும் அருள்பாலிக்க வருவார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா கூறியதாவது:- 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். அத்திவரதர் தரிசனத்தில் எங்களுடன் பணியாற்றிய அனைத்துத் துறை ஊழியர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து ஆலோசனை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி, தலைமைச்செயலாளர், டிஜிபி, உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அனைவருக்கும் நன்றி. பத்திரிகை துறை நண்பர்களுக்கும் நன்றி. துப்புரவு பணியாளர்கள் மேலும் 2 நாட்களுக்குள் துப்புரவு பணிகளை முடித்து விடுவார்கள். காஞ்சீபுரம் அத்திவரதர் தரிசனத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ.7 கோடி வசூலாகி உள்ளது. உண்டியல் எண்ணும் பணி முழுமையாக முடிவடையவில்லை. சாலை பணிகள் 15 முதல் 20 நாளில் முடிந்துவிடும். நாள்தோறும் 25 டன் அளவு குப்பை சேர்ந்துள்ளது. அவை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படும். அத்திவரதர் வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்