மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கேட்கும் மகத்தான சாதனை புரிந்தவர் வாரியார் சுவாமிகள்.

ஆன்மிகச் சொற்பொழிவையும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கேட்கும் மகத்தான சாதனை புரிந்தவர் வாரியார் சுவாமிகள். தமிழ்க்கடல் என்று போற்றப்பட்ட அவரது சொற்பொழிவில் ஆன்மிகம் ஆழம் காணும். சிந்தனைகள் சிறகடிக்கும். இசை நம்மை ஈர்க்கும். நகைச்சுவை நர்த்தனமிடும். பெரியவர்களும், பெண்களும், இளைஞர்களும் சிறுவர்களும் கூட அவரது சொற்பொழிவைக் கேட்கக் கூடுவார்கள். எளிய தமிழில் இனிய குரலில், இசையையும் கலந்து அவர் கொடுக்கும் ஆன்மிக அமுதத்தை அள்ளிப் பருகிக்கொண்டே இருப்பார்கள். சிறுவர்களிடம் சிறு சிறு கேள்வி கேட்பார். சரியான விடை சொன்னவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிப்பார். ஒருமுறை சொற்பொழிவின் போது ஒரு சிறுவனிடம் முருகனின் அப்பா பெயர் என்ன என்று கேட்டார். அது திருவிளையாடல் சினிமா வந்த நேரம். அதில் சிவாஜி கணேசன் முருகனுக்கு அப்பாவாக நடித்திருப்பார். அதைப் பார்த்திருந்த சிறுவன், சிவாஜி என்று சொல்லிவிட்டான். கூட்டத்தினர் சிரித்தனர். வாரியார் சுவாமிகள் கையசைத்து அவர்களை அடக்கிவிட்டு, அவன் சரியாகத்தானே சொல்லியிருக்கிறான். பெரியவர்களின் பெயரைச்சொல்லும் போது ஜி சேர்த்து மரியாதையாகச் சொல்வது வழக்கம். காந்திஜி, நேருஜி என்பார்கள். முருகனின் அப்பா பெயர் சிவா. மரியாதையாக ஜி சேர்த்து சிவாஜி என்று சொல்லியிருக்கிறான் என்று சொல்ல அவையோர் ஆரவாரம் செய்தனர். பிறர் இவரை மடக்க வேண்டும் என்று கேள்வி கேட்டால் சுடச்சுட பதில் சொல்வார். அவர் நெற்றியில் பூசியிருக்கும் விபூதியைச் சுட்டிக்காட்டி ஓர் இளைஞன் நெற்றியில் ஏன் இப்படி வெள்ளையடித்திருக்கிறீர்கள் என்று கேட்ட போது “நல்ல சுவருக்குத்தான் வெள்ளையடிப்பார்கள். குட்டிச்சுவருக்கெல்லாம் வெள்ளையடிக்க மாட்டார்கள்” என்று அவர் சொன்னதும் அந்த இளைஞன் ஓடியே போய் விட்டானாம். அது போலவே வாரியாரும் நடிகர் எம்.ஆர்.ராதாவும் ஒரு திருமண வீட்டில் சந்தித்துக்கொள்ள வேண்டிய நிலை. அருகில் அமர்ந்திருந்த வாரியார் சுவாமிகளிடம் எம்.ஆர்.ராதா கிண்டல் தொனியில் சுவாமி! முருகனுக்கு ஆறு தலை என்றாங்கோ அப்படீன்னா அவர் எப்படித் தூங்கியிருப்பார்? என்று கேட்டார். உடனே வாரியார் சுவாமிகள், கொஞ்சம் பொறுங்க என்று சொல்லிவிட்டு மகளின் திருமண ஏற்பாட்டை செய்து கொண்டிருந்த பெற்றோரை அழைத்தார். நேற்று இரவு தூங்கினீர்களா? என்று கேட்டார். எப்படி சாமி முடியும்? இந்தத் திருமணம் நல்லபடியாக முடியணுமே என்கிற நினைப்பில் பல நாட்கள் தூங்கவில்லை என்றார். உடனே வாரியார் சுவாமிகள் எம்.ஆர்.ராதா பக்கம் திரும்பி பாத்தீங்களா? ஒரு பெண்ணைக் கரையேத்துறதுக்கே இவங்களால தூங்க முடியலைன்னா கோடானு கோடி பக்தர்களைக் காக்கத் துடிக்கும் முருகன் எப்படித் தூங்குவான்? என்றார். பதில் சொல்ல முடியாமல் எம்.ஆர்.ராதா அடங்கிப்போனாராம். அதைப் போலவே சமயோஜிதமாகப் பேசுவதிலும் வாரியார் வல்லவர்.  ஒருமுறை கம்பராமாயண சொற்பொழிவு செய்து கொண்டிருக்கும் போது, ஆஞ்சநேயரின் அருங்குணங்களை வர்ணித்துக் கொண்டிருந்தார். அப்போது பெருந்தலைவர் காமராஜர், சொற்பொழிவைக் கேட்க கூட்டத்துக்கு வந்துகொண்டிருந்தார். உடனே வாரியார் சுவாமிகள், பிரம்மசாரிகளால் தான் பெருஞ்சாதனைகளைச் செய்ய முடியும்” என்றாராம். ஆஞ்சநேயரும் பிரம்மச்சாரி, பெருந்தலைவரும் பிரம்மச்சாரி இந்த ஒப்புமையைப் புரிந்து கொண்ட கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர். ஏறக்குறைய 150 நூல்களைப் படைத்துள்ளார். சமய சொற்பொழிவில் கிடைக்கும் தொகையை ஆலயங்களின் திருப்பணிக்காகப் பயன்படுத்தி மகிழ்ச்சியடைவார். மோகனூரில் 1940-ம் ஆண்டு அருணகிரிநாதர் அறச்சாலையை ஏற்படுத்தினார். வயலூர், வடலூர், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், சமயபுரம் போன்ற பல ஊர்களில் உள்ளஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்துள்ளார். அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி, சொற்பொழிவு வள்ளல், கலைமாமணி, ஞானக்கதிரவன் இன்னும் பல அடங்கும். வேலூருக்கும் காட்பாடிக்கும் இடையில் உள்ள காங்கேய நல்லூரில் இவர் பிறந்ததால் அந்த ஊர் பெருமை பெற்றது. தந்தை மல்லையாதாசர், தாய் கனகவல்லி அம்மையார். 1906-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி இந்த அவதார அற்புதம் நடந்தது. தந்தைக்கு ஆன்மிகச் சொற்பொழிவு செய்வதே முக்கிய தொழில். இதுவே வாரியாருக்கு முன்னோடியாக இருந்தது. தந்தையிடம் ஆன்மிகத்தையும் தமிழையும் கற்றார். பத்தாவது வயதிலேயே ஆயிரக்கணக்கான பாடல்களை மனப்பாடமாகச் சொல்லி மற்றவர்களை பிரமிக்க வைத்தார். லண்டன் மாநகரின் பக்தர்களுக்கு ஆன்மிகச் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விமானத்தில் தமிழகம் திரும்பிக் கொண்டிருந்தார். அருகிலிருந்த தனது பக்தரிடம் திருப்பதியைத் தாண்டிவிட்டோமா? என்று கேட்டாராம். ஆமாம் சாமி என்றதும் “அடுத்தது திருத்தணிதானே” என்று சொல்லிய கொஞ்ச நேரத்தில் முருகன் திருவடி அடைந்து விட்டார். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்து ஆயில்யம் நட்சத்திரத்தில் மறைந்தது அந்த ஆன்மிக நட்சத்திரம். அவர் தனது சொற்பொழிவில், அருணகிரி நாதரை அழைத்துப்போக முருகப்பெருமான் மயிலை அனுப்பி வைத்தானாம். நமக்கெல்லாம் அந்த நல்வாய்ப்பு கிட்டவா போகிறது? என்பார். அவருக்கும் அந்த பாக்கியம் கிட்டியது. விமானத்தையே மயிலாக அனுப்பி வைத்தான் முருகன் என்று சொல்லலாம். 1993-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி அந்த அதிசயம் நிகழ்ந்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்