நெருக்கடி சூழ்நிலையில் கருணாநிதிக்கு பக்கபலமாக இருந்தவர் காமராஜர் என்றுமு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்

பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனரும், தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் டி.தனுஷ்கோடி, இளைஞரணி செயலாளர் கே.ஏ.எஸ்.ஆர்.பிரபு, மாணவரணி செயலாளர் என்.கார்த்திக் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் டி.ஆர்.சந்திரசேகரன் வரவேற்புரையாற்றினார். எர்ணாவூர் நாராயணனின் மனைவி லதா குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மாணவ-மாணவிகளுக்கு லேப்-டாப் மற்றும் கல்வி உதவித்தொகையை வழங்கி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- காமராஜரின் பிறந்தநாளை ஒரு மாதம் கழித்தும் நாம் கொண்டாடுகிறோம் என்பதில் ஆச்சரியம் இல்லை. தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி, காமராஜர் என இவர்களது பிறந்தநாள் என்பது ஒருநாள் விழா அல்ல, ஒரு ஆண்டு முழுவதும் கொண்டாடக்கூடிய அளவில் விளங்கிய தலைவர்கள். ஏனெனில் இவர்கள் உலக தமிழர்களின் பாதுகாவலராக வாழ்ந்தவர்கள். இந்த விழாவில் பங்கேற்பது எனக்கு பெருமை மட்டுமல்ல, எனது உரிமை. இதை சொல்வதற்கு தனிப்பட்ட முறையில் காரணம் உண்டு. எனது திருமணம் 1975-ம் ஆண்டு ஆகஸ்டு 20-ந்தேதி நடந்தது. எனது திருமணத்துக்கு காமராஜர் வரவேண்டும் என்று கருணாநிதி விரும்பினார். அதன்படியே சென்னை தியாகராயநகரில் உள்ள காமராஜர் வீட்டுக்கு அழைப்பு விடுக்க நேரில் சென்றார். அப்போது காமராஜர் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அழைப்பிதழை காமராஜரிடம் கொடுத்துவிட்டு, 'உங்களுக்கு உடல்நலம் சரியில்லை. திருமணம் முடிந்தவுடன் மணமக்களை உங்கள் வீட்டுக்கு அழைத்து வருகிறேன். நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்' என்று கருணாநிதி கூறினார். அப்போது “உங்கள் மகனை நான் பார்க்கணும். நிச்சயம் வருவேன். ஆனால் படிக்கட்டில் என்னால் ஏறமுடியாது. அதற்கு மாற்றாக ஏதாவது வசதி செய்துதர முடியுமா?”, என்று காமராஜர் கேட்டார். உடனடியாக 'நீங்கள் வருவதாக இருந்தால் மேடைக்கே உங்கள் கார் வரக்கூடிய வகையில் வசதி செய்கிறேன்' என்று கருணாநிதி கூறினார். அதன்படியே உருவாக்கப்பட்ட திருமண மேடையில் காரில் வந்து என்னை வாழ்த்தி சென்றவர் காமராஜர். காமராஜர் வாழ்த்திய இந்த ஸ்டாலின், இன்று தி.மு.க. தலைவராக உங்கள் முன்பு பேசிக்கொண்டு இருக்கிறேன். அதுதான் எனக்குள்ள பெருமை. காமராஜர் ஒரு கட்சி தலைவர் மட்டுமல்ல, அவர் ஒரு இனத்தின் தலைவர். நாட்டின் பிரதமர்களை உருவாக்கி தந்த 'கிங்மேக்கர்'. தமிழகத்தை திறம்பட ஆண்ட முதல்-அமைச்சர். ஏழை பங்காளன். கல்விக்கு கண் திறந்த தலைவர். இப்போதும் அவரை பாராட்டி பெருமைப்படுகிறோம். அண்ணா மறைவுக்கு பிறகு, பிரச்சினைக்குரிய விவகாரங்களின்போது காமராஜரை தேடி சென்று அவரை கலந்து பேசித்தான் கருணாநிதி முடிவு எடுப்பார். நெருக்கடி நிலையின்போது நாட்டின் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தார். நெருக்கடி நிலையை எதிர்க்க கருணாநிதி முடிவு செய்தார். அதுதொடர்பாக காமராஜரை சந்தித்து ஆலோசித்தார். 'எந்த காரணத்துக்காகவும் உனது பதவியை ராஜினாமா செய்யவேண்டாம். இந்தியாவிலேயே சுதந்திர காற்று தமிழகத்தில் தான் வீசிக்கொண்டிருக்கிறது', என்று கருணாநிதிக்கு, காமராஜர் ஆலோசனை கொடுத்தார். இதுபோல இக்கட்டான சூழ்நிலையில் கருணாநிதிக்கு பக்கபலமாக இருந்து அறிவுரை, ஆலோசனை வழங்கியவர், காமராஜர். காமராஜரை 'பச்சை தமிழர்' என்று பெரியார் அழைப்பார். 'ரட்சகர்' என்று கூட சொல்லியிருக்கிறார். இது ஆன்மிக சொல். அதுகுறித்த விமர்சனமும் எழுந்தது. 1925-ம் ஆண்டில் பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு 1953-ம் ஆண்டு காங்கிரசுக்கு ஆதரவு தந்தார். இதற்கு காமராஜரின் செயல்பாடு தான் காரணம். 1954-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, காமராஜர் முதல்-அமைச்சர் ஆக்கப்பட்டார். ஆனால் அவர் அப்போது எம்.எல்.ஏ. அல்ல. இதைத்தொடர்ந்து குடியாத்தத்தில் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 'குணாளா குடியாத்தம் வா, உன்னை வெற்றியடைய செய்து சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்கிறோம், என்று அண்ணா கூறினார். தி.மு.க. துணையுடன் அவர் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ. ஆகி முதல்-அமைச்சராக அமர்ந்தார், காமராஜர். 1967-ம் ஆண்டு தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அப்போது விருதுநகரில் காமராஜர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க.வின் மாணவரணி தலைவர் சீனிவாசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காமராஜர் அதில் தோல்வி அடைந்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் அண்ணாவின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. காமராஜர் தோற்றிருக்க கூடாது என்று ஏக்கத்தை வெளிப்படுத்தினார். வெற்றிபெற்ற தி.மு.க. வேட்பாளர் சீனிவாசன் ஆசையோடு அணிவிக்க வந்த மாலையையும் அண்ணா மறுத்துவிட்டார். அந்தளவு காமராஜர் மீது பற்றும், உயர்ந்த எண்ணத்தையும் அண்ணா கொண்டிருந்தார். இன்றைக்கு உள்ள அரசியல் சூழலில் ஒரு அடிமை ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. கைகட்டி, வாய்பொத்தி ஒரு சேவகன் எனும் நிலையில் ஆட்சி நடக்கிறது. இன்றைக்கு 'நாடாளுமன்றத்துக்கு போய் இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?', என்று தி.மு.க. எம்.பி.க்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். நான் அவரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தினமும் காலை எழுந்தவுடன் பத்திரிகை பாருங்கள். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் தமிழக உரிமைக்காக முழக்கமிட்டது தெரியவில்லை. எனக்கு ஒரு வேதனை என்னவென்றால் காமராஜர் உட்கார்ந்த அந்த இடத்தில் இப்போது கழிசடையெல்லாம் உட்கார்ந்து இருக்கிறதே என்பது தான். அதுதான் எனது மனதை வாட்டுகிறது. காமராஜர் ஆட்சியில் மழைவெள்ளம் வந்தபோது, நேரிடையாக களத்தில் இறங்கினார். எதிர்க்கட்சி தலைவராக இருந்த அண்ணா அதை பாராட்டினார். ஒகி புயலின்போது நாமெல்லாம் குரல்கொடுத்ததற்கு பின்பு, அதுவும் காலதாமதமாக தான் பாதிப்புகளை பார்க்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். இப்போது நீலகிரி மாவட்டத்தின் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவராக நான் நேரிடையாக அங்கு சென்று பார்த்தேன். 2 நாட்கள் ஆய்வு செய்தேன். எங்கள் நிர்வாகிகள் இன்றுவரை அங்கு பார்வையிட்டு வருகிறார்கள். ரூ.10 கோடி நிவாரண ஒதுக்கீடு என்று அங்கேயே உறுதி அளித்து வந்தேன். அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் 'எதிர்க்கட்சி தலைவர் 'சீன்' போட போயிருக்கிறார், விளம்பரம் தேடுகிறார்' என்று விமர்சனம் செய்தார்கள். எனக்கா விளம்பரம் வேண்டும்? எடப்பாடி பழனிசாமியை பார்த்து கேட்கிறேன், யாருடைய துணையும் இல்லாமல் தனியாக ஒரு கிராமத்துக்கு நான் சென்று வருகிறேன். நீங்களும் சென்று வாருங்கள்? அங்கு உள்ளவர்கள் என்னை அடையாளம் சொல்வார்கள். ஆனால் உங்களை எப்படி சொல்வார்கள் என்று பார்க்கிறேன். 'மல்லுக்கட்டு மைனர் வரார்' என்று வேண்டுமானால் உங்களை பார்த்து சொல்லலாம். இதுதான் இன்றைய நிலை. தி.மு.க. ஆட்சியில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலைக்கு காமராஜர் பெயரை வைத்தது கருணாநிதி. கன்னியாகுமரியில் காமராஜர் மணிமண்டபம் அமைத்ததும், கருணாநிதியால் தான். நெல்லையில் சிலை, காமராஜர் உதவியாளர் வைரவனுக்கு வீடு-வேலைவாய்ப்பு கொடுத்தது தி.மு.க. காமராஜர் தொண்டருக்கு தொண்டர், தலைவருக்கு தலைவர். உண்மையான தலைவர்களுக்கு தான் உண்மையான தலைவரை பற்றி தெரியும். எடுபிடிகளுக்கு அது தெரியாது. 'ஏமாந்த தமிழகமே', என்று அண்ணா அடிக்கடி சொல்வார். அந்த தாழ்ந்த தமிழகம் தலைநிமிர வேண்டுமென்றால் காமராஜர் விழாவில் நாம் அனைவரும் உறுதி ஏற்று செயல்படுவோம். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு வாழ்த்துரை வழங்கி பேசினார். நிறைவாக சமத்துவ மக்கள் கழகத்தின் பொருளாளர் எம்.கண்ணன் நன்றியுரை நிகழ்த்தினார். விழாவில் சினிமா சண்டைபயிற்சி நிபுணர் ஜாக்குவார் தங்கம், தி.மு.க. எம்.பி.க்கள் ஆ.ராசா, கலாநிதி வீராசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்