“சிம்பாக்ஸ்” மோசடி சிபிசிஐடி விசாரணை தீவிரம்..!

வெளிநாட்டில் இருந்து வரும் இணைய அழைப்புகளை சட்ட விரோதமாக உள்ளூர் டெலிபோன் அழைப்புகளாக மாற்றி கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய கும்பலில் 5 பேரை கைது செய்துள்ள தமிழக சிபிசிஐடி போலீசார் இந்த மோசடி குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வரும் டெலிபோன் அழைப்புகள் மத்திய தொலை தொடர்பு துறை மூலம் அந்தந்த தகவல் தொடர்பு நிறுவனங்கள் வழியாக செல்லும். இதனால் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யபடுவதோடு வெளிநாட்டு அழைப்புகளாலும், தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்களாலும் அரசுக்கு வருவாயும் கிடைக்கும். ஆனால், சமீப காலமாக வெளிநாட்டில் உள்ள நபர்கள் மூலம் இணையதளம் வழியாக வரும் தொலைப்பேசி அழைப்புகள் உள்ளூர் அழைப்புகளாக மாற்றப்படுவதாகவும், இதன் மூலம் மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது போன்ற சட்ட விரோத இணைப்புகள் எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. இது போன்ற சட்ட விரோத தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்று சென்னை அண்ணாநகர் தங்கம் காலனியில் செயல்பட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் டி.ஆர்.ஏ.வி என்ற அந்த சட்டவிரோத தொலைத்தொடர்பு நிறுவனம் செயல்படுவது கண்டுப்பிடிக்கப்பட்டு, இந்த மோசடியில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு தொலைத்தொடர்பு உபகரணங்களையும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர். குறிப்பாக பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்ட சீனா நாட்டின் தயாரிப்பான 22 சிம் பாக்ஸ் கருவிகள், ஆயிரத்து 500 சிம் கார்டுகள் தொலைத்தொடர்பு கருவிகளை பறிமுதல் செய்தனர். வெளிநாட்டிலிருந்து வரும் இணைய அழைப்புகளை அரசுக்கு தெரியாமல் அண்ணாநகரில் உள்ள இந்த சட்டவிரோத தொலைத்தொடர்பு இணைப்பகம் மூலமாக உள்ளூர் இணைப்புகளாக மாற்றி இங்கிருக்கும் சிம் கார்டு மூலமாக அழைப்பு வந்தது போல் மோசடி செய்துள்ளனர். இதற்காக சென்னையில் போலி முகவரி மூலம் ஆயிரக்கணக்கான சிம் கார்டுகளை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடமாக நடக்கும் இந்த போலி சட்டவிரோத தொலைத் தொடர்பு நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அந்நிறுவனத்தின் நிர்வாகி சென்னை நொளம்பூரைச் சேர்ந்த முப்பிரி ரெட்டி, சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த சந்திரசேகர் உள்ளிட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலிசார் முடிவு செய்துள்ளனர். இந்த மோசடியை இன்னும் எப்படியெல்லாம் அரங்கேற்றியுள்ளனர், எவ்வளவு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர் என விசாரணை நடைபெறவுள்ளது. இது ஒருபக்கம் இருக்க இது போன்ற வெளிநாட்டு அழைப்புகளை கண்காணிக்கவோ, பதிவு செய்யவோ முடியாது என்பதால் இது குறித்து விசாரிக்க தமிழக சிபிசிஐடி-யில் உள்ள சைபர் கிரைம் போலீசாருடன் தொழில் நுட்ப நுணுக்கங்களை அறிந்த குழு ஒன்றும் மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளது. இந்த சட்ட விரோத வழிமுறைகள் மூலம், இந்தியாவிற்கு எதிரான நாசவேலைகளை வெளிநாட்டில் இருந்து செய்து வரும் பயங்கரவாத அமைப்பினரும் பயன்படுத்தியிருக்கலாம் என்பதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்