தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறையின் தகவலையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை.

தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக பெங்களூரு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவித்த தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உள்ளிட்ட 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டு வெடித்ததில் சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக இந்தியாவின் கடலோரப் பகுதியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை-இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியவை தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. சென்னையில் உள்ள இலங்கை தூதரகம், புத்தமடம், கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு காவல்துறை எச்சரிக்கை: இந்த நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூரு மாநகரக் காவல்துறைக்கு அண்மையில் ஒரு லாரி ஓட்டுநர் ரகசியத் தகவல் அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கியமான நகரங்கள், ரயில் நிலையங்கள், பயணிகள் ரயில்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 தீவிரவாதிகள் ஊடுருவி பதுங்கியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்தத் தகவலின் அடிப்படையில் பெங்களூரு மாநகர காவல்துறை, தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை செய்து ஒரு கடிதம் அனுப்பியது. அதன்பேரில் சென்னை விமான நிலையம், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கியமான ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் வெள்ளிக்கிழமை முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரகசிய விசாரணை: தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் ராமநாதபுரத்தில் மத இயக்கங்களை கண்காணிக்கும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினரா என்ற கோணத்தில் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள முக்கியமான ரயில் நிலையங்கள், பாம்பன் பாலம் உள்ளிட்ட முக்கியமான ரயில் பாலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் அவ்வப்போது வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாரால் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதேபோல மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், வழிப்பாட்டு தலங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் சந்தேகத்துக்குரிய நபர் சுற்றித் திரிந்தால் உடனடியாக அவர்களிடம் சோதனை செய்து, விசாரணை செய்யும்படி உயர் அதிகாரிகள், போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்