கழிப்பறைகள் வேண்டும்.. நவீன கழிப்பறைகள், மாநகராட்சியின் உரிய பராமரிப்பு இல்லாததால், ஆங்காங்கே, நடைபாதைகளை ஆக்கிரமித்து,

சென்னையில் பெரும் வரவேற்பு பெற்ற, நவீன கழிப்பறைகள், மாநகராட்சியின் உரிய பராமரிப்பு இல்லாததால், ஆங்காங்கே, நடைபாதைகளை ஆக்கிரமித்து, காட்சி பொருளாக மாறியுள்ளது.சென்னை மாநகராட்சியில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, 853 இடங்களில், 6,701 அறைகளுடன் கழிப்பறைகள் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. பராமரிப்பு பணிக்காக, ஆண்டுதோறும், 30 கோடி ரூபாய்க்கு மேல், நிதி ஒதுக்கப்படுகிறது.'கமிஷன்'ஆனால், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், ரவுடிகளின் ஆக்கிரமிப்பில் மாநகராட்சி கழிப்பறைகள் உள்ளன. இவர்கள், மக்களிடம், ஐந்து முதல், 10 ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கின்றனர்.மக்களிடம் வசூலிக்கும் கட்டணத்தில், ஒரு குறிப்பிட்ட தொகை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கமிஷனாக செல்வதால், தடுக்க வேண்டிய அதிகாரிகளும், இதை கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், 2012ல், 'நம்ம டாய்லெட்' என்ற நவீன கழிப்பறை திட்டத்தை, மாநகராட்சி கொண்டு வந்தது.வரவேற்புஅதன்படி, சென்னை முழுவதும், 5,000 நவீன கழிப்பறைகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. முதற்கட்டமாக நடைபாதைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில், 35 கோடி ரூபாய் செலவில், 348 இடங்களில், நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டன.இந்த கழிப்பறைகள் பெரும்பாலும், ஆண்களுக்காக அமைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில இடங்களில், பெண்களுக்காக அமைக்கப்பட்டன. இவை, பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.இந்த நவீன கழிப்பறைகளில், ஒன்று அல்லது இரண்டு அறைகள் மட்டுமே வைக்கப்பட்டதால், மாநகராட்சி கழிப்பறைகளில், அடாவடி கட்டண வசூலில் ஈடுபட்டோரால், இவற்றை ஆக்கிரமிக்க முடியவில்லை.சீர்கேடுநவீன கழிப்பறைகளில் இருந்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, 'கமிஷன்' வரத்து இல்லாததால், அவற்றை பராமரிக்காமலேயே கிடப்பில் போட்டனர். மேலும், புது கழிப்பறைகள் அமைப்பதையும் கைவிட்டனர். இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது. பராமரிப்பு இல்லாத நிலையில், பல இடங்களில், மக்கள் இயற்கை உபாதைகளை, நடைபாதைகளிலும், சாலை ஓரங்களிலும், ரயில் தண்டவாளங்களிலும் நீர்நிலை பகுதிகளிலும் கழித்து வருகின்றனர்.இதனால், சுகாதார சீர்கேடும், நடைபாதைகள் உபயோகப்படுத்த முடியாத வகையிலும் காணப்படுகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான், சென்னை மாநகராட்சி, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக அறிவித்து கொண்டது. இது வெறும் கண்துடைப்பே, இன்றளவும், பல்வேறு பகுதிகளில், மக்கள் தங்களின் அன்றாட இயற்கை உபாதைகளை, திறந்தவெளி இடங்களில் தான் கழித்து வருகின்றனர்.21,000 கழிப்பறைகள் வேண்டும்சென்னையில், 10 சதவீதத்துக்கு மேற்பட்டோர், திறந்தவெளிகளில் தான், இன்றளவும் மலம் கழிக்கின்றனர். 30 சதவீதம் பேர் சிறுநீரை, திறந்தவெளிகளில் கழிக்கின்றனர். இதற்கு, மக்கள் தொகைக்கு ஏற்ப, பொது கழிப்பறைகள் இல்லாதது தான் முக்கிய காரணம். தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப, 21 ஆயிரம் கழிப்பறைகள் வேண்டும். ஆனால், மிக குறைந்த கழிப்பறைகளே உள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ள கழிப்பறைகளை மீட்டு, மக்கள் இலவசமாக பயன்படுத்த, மாநகராட்சி அனுமதிக்க வேண்டும்.மேலும், குடிசை மாற்று வாரிய பகுதிகள், சாலையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் ரயில் தண்டவாள ஓரங்களில் வசிக்கும் மக்களுக்காக, அப்பகுதிகளில் கூடுதலாக கழிப்பறைகளை மாநகராட்சி அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்