எல்லைகளில் நவீன கேமராக்கள்..! வாகனத்திலும் தப்ப முடியாது...

சென்னையெங்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையின் எல்லை பகுதிகளில் ANPR எனும் அதி நவீன கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இதன் மூலம் எந்த சந்தேகத்திற்கிடமான வாகனங்களும் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து தப்ப முடியாது எனும் நிலையை உருவாக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்று கிழக்கு கடற்கரை சாலை, இந்த சாலையில் சென்னை காவல் துறையின் எல்லை பகுதியான முட்டுக்காடு பகுதி பகுதியில் வாகனத்தின் பதிவெண்ணை பதிவு செய்து விவரங்களை காண்பிக்கும் வகையிலான அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதே போல பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்சாலையை இணைக்கும் சோதனை சாவடியிலும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நவீன கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய புறக்காவல் நிலையத்தையும், கேமராக்களின் இயக்கத்தையும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இந்த கிழக்கு கடற்கரைச் சாலையில் மட்டும் 8 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாலையின் இரு திசைகளிலும் பொருத்தப்பட்டுள்ள இத்தகைய கேமராக்கள் கடந்து செல்லும் வாகனங்களின் பதிவெண்ணை துல்லியமாக பதிவு செய்யும். அதே வேளையில் பதிவு செய்த எண்ணை வைத்து வாகனத்தின் உரிமையாளர் யார், எந்த ஊரில் வாங்கி பதிவு செய்யப்பட்டது போன்ற விவரங்களை அருகில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் கணிப்பொறியில் காண்பிக்கும். இதனால் நகருக்குள் குற்றம் சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு வாகனத்தில் சென்னையின் எல்லையை கடந்து தப்பி செல்லும் வாகனங்களை அடையாளம் கண்டு எளிதில் சுற்றி வளைத்துவிடலாம். கிழக்கு கடற்கரை சாலை போன்ற பரபரப்பான சாலையில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி செல்லும் வாகன ஓட்டிகளும் இனி இந்த கேமராவின் கண்காணிப்பில் இருந்து தப்ப முடியாது. இந்த தொழில் நுட்பங்களை கொண்ட கேமராக்கள் சென்னையின் எல்லைகளில் இணையும் ஓவ்வொரு சாலைகளிலும் அமைக்கத் திட்டமிட்டு இருப்பதாக காவல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த கேமாராவின் இயக்கத்தை தொடங்கி வைத்த பிறகு நீலாங்கரை, அக்கரை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 217 கண்காணிப்புக் கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து பேசினார். சிசிடிவி கேமராவால் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நன்கொடை வழங்கியவர்களுக்கு காவல்துறை சார்பில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நன்கொடையாளர்களை அமர வைத்து காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அவர்களுக்கு உணவுகளை பரிமாறி மகிழ்ந்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்