நெல்லை மாவட்டத்தை பிரிக்க பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

நெல்லை, தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படுவது குறித்த கருத்து கேட்பு கூட்டம் சென்னை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்தியகோபால் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. காலை 10 மணி முதல் 11 மணி வரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். அப்போது அனைவரும் ஒருமித்த கருத்தை தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான மக்கள் நெல்லை மாவட்டத்தை பிரிப்பதை வரவேற்கவில்லை. அம்பை, ஆலங்குளம், சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகா பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களை தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் கொடுத்த மனுவில், “சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்கள் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. வன்னிக்கோனேந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் வேலுச்சாமி, வன்னிக்கோனேந்தல் பகுதி தி.மு.க. செயலாளர் செல்வராஜ், அ.ம.மு.க. தொழிற்சங்க செயலாளர் அண்ணாசாமி ஆகியோர் சங்கரன்கோவில் தாலுகா, திருவேங்கடம் தாலுகா நெல்லை மாவட்டத்திலேயே தொடர வேண்டும் என்று மனு கொடுத்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் கசமுத்து, அம்பை தாலுகாவை நெல்லை மாவட்டத்தில் தான் நீடிக்க வேண்டும், காங்கிரஸ் நிர்வாகி வக்கீல் பால்ராஜ், தமிழக நலிவுற்றோர் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் ராஜதுரை ஆகியோர் கொடுத்த மனுவில், ஆலங்குளம் தொகுதியை தென்காசி மாவட்டத்தில் சேர்க்கக்கூடாது. நெல்லை மாவட்டத்தில் தான் சேர்க்க வேண்டும் என்று கூறி உள்ளனர். சங்கரன்கோவில் பகுதியை நெல்லை மாவட்டத்தில் தான் சேர்க்க வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கடையம் அருகே உள்ள புங்கம்பட்டியை சேர்ந்த வக்கீல் ராஜசேகர், கடையம் யூனியனில் உள்ள 24 கிராம பஞ்சாயத்தையும், ஒரு பேரூராட்சியையும் தென்காசி மாவட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மனு கொடுத்தார். இதேபோல் கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த மக்களும் தங்களை தென்காசி மாவட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஞானதிரவியம் எம்.பி. கூறுகையில், “நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள எந்த சட்டசபை தொகுதிகளையும் தென்காசி மாவட்டத்தில் சேர்க்கக்கூடாது” என்று தெரிவித்தார். இன்பத்துரை எம்.எல்.ஏ. கூறுகையில், “திசையன்விளை அருகே உள்ள அரசூர் பஞ்சாயத்தை திசையன்விளை தாலுகாவோடு இணைத்து நெல்லை மாவட்டத்தில் சேர்க்க வேண்டும்” என்றார். இதேபோல் தென்காசியிலும் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்