டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பயணச்சீட்டில்லாமல் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வசூலிக்கப்படும் அபராதம் குறித்து விவரம் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள இந்திய ரயில்வே நிர்வாகம், கடந்த 2016 ஆண்டு முதல் 2019 வரை ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை 31% உயர்ந்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடம் 2016 முதல் 2019 வரையிலான மூன்று ஆண்டுகளில் 1377 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. 2016-2017ம் ஆண்டில் 405.30 கோடி ரூபாய் அபராதமும், 2017-218ம் ஆண்டில் 441.62 கோடி ரூபாயும், 2018-2019ம் ஆண்டில் 530.06 கோடி ரூபாயும் அபராதம் வசூலித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, இந்திய ரயில்வேயின் 2016-2017ம் ஆண்டின் நிதி அறிக்கையை ஆய்வு செய்த பாராளுமன்ற ரயில்வே மாநாட்டு குழு, பயணச்சீட்டு இல்லாமல் அதிகம் பேர் ரயிலில் பயணம் செய்வதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தது. இதனையடுத்து தீவிர நடவடிக்கையில் இறங்கிய ரயில்வே நிர்வாகம், ஆண்டுக்கு இவ்வளவு அபராதத்தை வசூலித்து தரவேண்டும் என்று பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு டார்கெட் வைத்தது. இதன் விளைவாக, தீவிர பரிசோதனையில் இறங்கிய பரிசோதகர்கள் கோடிக்கணக்கிலான பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடம் அபராதம் வசூலித்துள்ளனர். குறிப்பாக 2018 ஏப்ரல் முதல் 2019 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 80,90,000 பயணிகள் பயணச்சீட்டில்லாமல் பயணம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமாகும். பயணச்சீட்டின்றி பயணம் செய்து, பயணச்சீட்டு பரிசோதகரிடம் பயணி பிடிபட்டால் குறைந்த பட்சம் 250 ரூபாய் அபராத கட்டணமும், அவர் செல்ல வேண்டிய இடத்திற்கான கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும். அந்த பயணி அபராதம் செலுத்த மறுத்தால் அவர் இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவார். அங்கு அவர்மீது ரயில்வே சட்டம் 137வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார். அங்கு, அவருக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத் தொகையையும் செலுத்த பணம் இல்லையென்றாலோ அல்லது செலுத்த மறுத்தாலோ அவருக்கு 6 மாதங்கள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும். இவ்வளவு, கடுமையான கெடுபிடிகள் இருக்கும் நிலையிலும் ஆண்டுதோறும் பயணச்சீட்டில்லாமல் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்