சப் கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் நேற்று நடந்தது
திருக்கனுார், விநாயகம்பட்டு கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக சப் கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் நேற்று நடந்தது.திருக்கனுார் அடுத்த விநாயகம்பட்டு கிராமத்தில் கடந்த மாதம் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பதட்டம் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகம் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.இதனையடுத்து, எஸ்.பி., தலைமையில் கடந்த 30ம் தேதி இரு பிரிவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று வில்லியனுார் தாலுகாவில் சப் கலெக்டர் சஷ்வத் சவ்ரப் தலைமையில் விநாயகம்பட்டு கிராமத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே சமாதான கூட்டம் நடந்தது.கூட்டத்தில், எஸ்.பி., ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் வேலு, குமார் மற்றும் இரு பிரிவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் சப் கலெக்டர் சஷ்வத் சவ்ரப் பேசுகையில், விநாயகம்பட்டு கிராமத்தில் இரு பிரிவினரும், இனி எவ்வித பிரச்னைகளை வைத்துக் கொள்ளக் கூடாது. கடையில் ஏற்பட்ட பிரச்னை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதால், இதுதொடர்பாக எந்தவித போராட்டங்களும் நடத்தக் கூடாது. மேலும், இக்கிராமத்தில் இருபிரிவினர் இடையே பிரச்னையை துண்டும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதனையடுத்து, இரு பிரிவினரும், சமரசம் அடைந்து கலைந்து சென்றனர்.