பார் கவுன்சிலுக்கு, சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி அறிவுரை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. இதில் உறுப்பினர்களாக ஆர்.சி.பால்கனகராஜ், ஆர்.விடுதலை, கே.பாலு, ஜி.மோகனகிருஷ்ணன் உள்பட 25 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பின்னர், தலைவராக பி.எஸ்.அமல்ராஜ், துணைத்தலைவராக வி.கார்த்திகேயன், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவி ஏற்பு விழா சென்னை ஐகோர்ட்டில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி ஆர்.பானுமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைத்து பேசியதாவது:- ஊத்துக்கோட்டையில் ஆரம்பித்த என்னுடைய கடுமையான பயணம் டெல்லி சுப்ரீம்கோர்ட்டை சென்றடைந்தது என்று நீதிபதி என்.கிருபாகரன் என்னை வாழ்த்தி பேசினார். உண்மைதான், என்னுடைய பயணம் கடுமையானது. ஏராளமான தடைகள் இருந்தன. அந்த தடைகற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி முன்னேறியதால், இந்த பதவியை அடைந்துள்ளேன். வக்கீல் தொழில் என்பது புனிதமானது. பணத்துக்காக இந்த தொழிலில் இருக்கக்கூடாது. சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட சிறு தவறுகள் செய்யும் வக்கீல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி என்.கிருபாகரன் கூறினார். அவரது கருத்தில் இருந்து சிறிது மாறுபடுகிறேன். சிறு தவறுகளுக்கு எல்லாம் கடுமையான நடவடிக்கை எடுத்தால், பலர் தங்களது வாழ்வை தொலைத்து விடுவர். அதனால் சிறு தவறுகளுக்காக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது. நம் குடும்பத்தில் தாத்தா ஒரு கைத்தடியை வைத்துக்கொண்டு பேரக்குழந்தைகளை அடிப்பேன் என்று மிரட்டுவாரே, அதுபோல வக்கீல்களை பார் கவுன்சில் எச்சரித்து, கண்டித்து, மிரட்டி அனுப்ப வேண்டும். கடுமையான குற்றச்சாட்டுகளில் சிக்கும் வக்கீல்கள் மீது மட்டும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பேசிய ஐகோர்ட்டு மூத்த நீதிபதி கே.கே.சசிதரன், 'அண்டை மாநிலங்களில், வக்கீலாக பதிவு செய்யும் இளம் வக்கீல்களுக்கு குறிப்பிட்ட சில காலங்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுபோல, ஏழ்மை குடும்பத்தில் இருந்து வக்கீல் தொழிலுக்கு வருபவர்களுக்கும் உதவித்தொகை வழங்க பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார். மூத்த நீதிபதி என்.கிருபாகரன் பேசும்போது, 'வக்கீல்கள் தவறு செய்தால், அது பார் கவுன்சிலுக்கு தான் அவமானம். எனவே, கும்பலாக சென்று வீடுகளை காலி செய்யும் வக்கீல்கள், ஹெல்மெட் அணியாமலும், ஒரு வழிப்பாதையிலும் மோட்டார் சைக்கிளில் செல்லும் வக்கீல்களை உடனடியாக இடைநீக்கம் செய்யுங்கள். அப்போது தான் இந்த வக்கீல் தொழில் சிறப்பான நிலையை அடையும். வக்கீல்கள் என்றால் பெண் தர தயங்குகிறார்கள். வீடு வாடகைக்கு கூட தர மறுக்கிறார்கள். இதில் நான் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் சொல்கிறேன். சமுதாயத்தில் வக்கீல்களுக்கு முன்பு இருந்த மரியாதை மீண்டும் கிடைக்க வேண்டும். சட்டத்தை காப்பவர்களாக வக்கீல்கள் இருக்க வேண்டும். 2010-ம் ஆண்டு நாடு முழுவதும் 170 சட்டக்கல்லூரிகள் இருந்தன. தற்போது 1,500 கல்லூரிகள் உள்ளன. ஆண்டுக்கு 4½ லட்சம் புதிய வக்கீல்கள் வருகின்றனர். அவர்களுக்கு எங்கே வழக்குகள் உள்ளன. எனவே, கல்லூரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்' என்று பேசினார். மேலும், ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், டி.ராஜா, ஆர்.சுப்பிரமணியம், ஆனந்தவெங்கடேஷ் ஆகியோரும் பேசினர். அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் எஸ்.பிரபாகரன் பேசும்போது, '3 ஆண்டுகளுக்கு புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க தடை விதித்து அகில இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு முழுகாரணமும் நீதிபதி என்.கிருபாகரன் தான்' என்று கூறினார். விழாவில் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வரவேற்றார். துணைத்தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்