பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய செல்போன் கடைக்காரன் கூட்டாளியுடன் கைது

ராமநாதபுரம் அருகே பழுதான செல்போனை சரிசெய்ய கொடுத்த போது அதிலிருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை மார்பிங் செய்து இணையதளத்தில் பரவ விட்டுவிடுவேன் என கூறி, பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய செல்போன் கடைக்காரன் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டுள்ளான். ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் பழுதான தனது செல்போனை ராமநாதபுரத்தில் ஒரு கடையில் கொடுத்துள்ளார். அந்த செல்போனில் இருந்த படங்களையும், வெளிநாட்டில் இருந்த கணவருடன் அந்த பெண் பேசிய வீடியோ காட்சிகளையும் கணினியில் கடைக்காரர்கள் பதிவு செய்துள்ளனர். பின்னர் செல்போனை சரிசெய்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கொடுத்துள்ளனர். பின்னர் 2 நாட்கள் கழித்து அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு, அவரது ஆபாசபடங்கள் தங்களிடம் உள்ளதாகவும், அதை இன்டர்நெட்டில் பதிவேற்றாமல் இருக்க 5 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த தகவலை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்துபோன அந்த பெண், செய்வதறியாது பயம் மற்றும் பதட்டத்துடன் அழுது கொண்டிருந்துள்ளார். ஒரு வார காலமாக கணவரிடமும், உறவினர்களிடமும் சொல்ல முடியாமல் தவித்துள்ளார். மருமகள் சோகமாக இருப்பதை அறிந்த மாமனார், என்ன பிரச்சனை என்று கேட்ட போது நடந்த சம்பவங்களை கூறி அழுதுள்ளார். இதையடுத்து உடனடியாக உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு அவர் அழைத்து சென்றுள்ளார். காவல் ஆய்வாளர் பிரேமிடம் நடந்த விபரங்களை கூறி புகார் அளித்து கொண்டிருந்த போதே, பெண்ணின் செல்போனில் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். காவல்நிலையத்தில் அதிகாரிகள் முன்பே அவனிடம் பேசிய பெண், பணம் இல்லை என கூறி அழுதுள்ளார். உடனே இனி சரியாக வராது, நாளை ஒரு நாள் மட்டுமே டைம், பணம் வரவில்லை என்றால் படங்களை இன்டர்நெட்டில் ஏற்றி விடுவேன் என மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளான். இதைக் கேட்ட காவல்துறை அதிகாரிகள் மீண்டும் செல்போனில் அழைப்பு வந்தால், பணத்தை தருவதாகவும், குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும் போனில் பேசச் சொல்லியுள்ளனர். அதேபோல இரண்டு மணி நேரத்திற்குப் பின் மீண்டும் செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அப்போது அந்த பெண் மறுநாள் நகையை அடகு வைத்து பணத்தை தருவதாகச் சொல்லி, ராமநாதபுரம் டி பிளாக் பஸ்டாப் அருகே வரச் சொல்லியுள்ளார். இந்நிலையில் உச்சிப்புளி காவல்நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தலைமையில் எஸ்ஐ வசந்தகுமார், தனிப்பிரிவு தலைமை காவலர் மருது ஆகியோர் டி.பிளாக் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையை ஒட்டியவாறு மறைந்திருந்தனர். ஆனால்,அந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளதால், நேராக கலெக்டர் அலுவலகம் நடந்து செல்லுமாறும், தான் வந்து பணத்தை வாங்கிக்கொள்வதாகவும் மர்ம நபர் கூறியுள்ளான். அதனைத் தொடர்ந்து அந்த பெண் நடந்து செல்லும் போது, பின்னால் நெருங்கி வந்தவனை அங்கு மறைந்திருந்த தனிப்படை காவலர் மருது மடக்கி பிடித்துள்ளார். அவரிடமிருந்து மல்லுக்கட்டி தப்பியோட முயற்சித்த போது அருகில் மறைந்திருந்த மற்ற போலீசார் அவனை வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவன் ராமநாதபுரம் சுண்ணாம்புகாரத்தெருவை சேர்ந்த சோமசுந்தரம் என்பது தெரியவந்தது. தனக்கு ஏதும் தெரியாது என்றும், ரெகுநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்ற சூரியகுமார் தான் பணத்தை வாங்கி வர சொன்னதாகவும் சோமசுந்தரம் கூறியுள்ளான். இதையடுத்து அங்கிருந்தே பணத்தை பெற்றுக் கொண்டதாகவும் வந்து வாங்கிச் செல்லுமாறும் சுரேஷ்குமாரிடம் சோமசுந்தரத்தை போலீசார் பேச வைத்துள்ளனர். அதன்படி பெரியபட்டினம் விலக்கு ரோடு அருகே வரச்சொல்லி அவனையும் கையும் களவுமாக பிடித்தனர். இருவரிடம் நடத்திய விசாரணையில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளதும், தற்போது கடையில் இல்லை எனவும் கூறியுள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முகநூல், வாட்சப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள், தங்களது புகைப்படத்தையும் சொந்த விபரங்களையும் பதிவிடாமல் இருப்பதே நல்லது என்று காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர். ஒருவேளை செல்போன் பழுதானால், அதில் இருக்கும் படங்கள் மற்றும் குறுந்தகவல்களை முழுவதும் அழித்த பின்பு கடைகளில் பழுதுநீக்க கொடுப்பதே சிறந்தது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். எவரேனும் இது போன்று பணம் கேட்டு மிரட்டினால், அச்சமடையாமல், தயக்கமின்றி புகார் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)