நாகர்கோவில் அருகே கடல்சீற்றம் விடிய விடிய தூங்காமல் தவித்த மக்கள் 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

நாகர்கோவில் அருகே அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதியில் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படுவதும், அதனால் கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் சிரமப்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு அழிக்கால் பகுதியில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் ராட்சத அலைகள் உயரமாக எழும்பி கரையை நோக்கி ஆவேசத்துடன் வந்தன. அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்துக்குள் புகுந்த கடல்நீர் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. நள்ளிரவு நேரத்தில் கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன நடந்தது என்பதை அறிய அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது தான் கடல்சீற்றம் ஏற்பட்டு இருந்தது மக்களுக்கு தெரிய வந்தது. இரவு நேரம் என்பதால் என்ன செய்வது என்று திகைத்தனர். வீட்டை விட்டு வெளியேறினர் இருந்தாலும் இரவோடு இரவாக வீட்டை காலி செய்வது என தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். வீடு முழுவதும் மண் நிரம்பி கிடந்ததால் அவர்கள் விரைவாக வெளியேற முடியாமல் சிரமப்பட்டனர். ஏராளமான வீடுகளில் கட்டில், டி.வி., மெத்தை, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களும் தண்ணீரில் மூழ்கின. சில வீடுகளில் இருந்த பொருட்களை பாதுகாப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூக்கிச் சென்றனர். கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் விடிய, விடிய தூங்க முடியாமல் தவித்தனர். பின்னர் மேடான பகுதியில் உள்ள உறவினர்களது வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். காலையிலும் தொடர்ந்த சீற்றம் விடிய விடிய மீனவ மக்களின் தூக்கத்தை தொலைத்த கடல் சீற்றம் விடிந்த பிறகும் ஆக்ரோஷமாக இருந்தது. இதனால் மீனவ மக்கள் கடும் அவதிக்கு ஆளானதுடன், ஆத்திரமும் அடைந்தனர். ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மீனவ மக்களின் கோரிக்கையை அரசும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சாலைமறியல் எனவே ஆண்களும், பெண்களுமாக 200-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் கல்லுக்கெட்டி சந்திப்பு பகுதியில் காலை 10 மணிக்கு திரண்டனர். அவர்கள், நாகர்கோவில்- குளச்சல் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற 3 அரசு பஸ்களை சிறைபிடித்தனர். தகவல் அறிந்த சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சற்குரு கண்ணன், பேரூர் செயலாளர் பிரபாஎழில் மற்றும் ஏராளமான மீனவ மக்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் கலந்து கொண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். தூண்டில் வளைவு... மேலும் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் பாஞ்சாலி, கணபதிபுரம் கிராம நிர்வாக அதிகாரி உஷாதேவி, மீன்வளத்துறை ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மீனவ மக்கள் அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். போராட்டத்தின் போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், கலெக்டர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறினர். கஞ்சி காய்ச்சும் போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 1 மணி ஆகியும் முடிவடையவில்லை. அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த மீனவ மக்கள் நடுரோட்டில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில்-குளச்சல் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. உடனே, போலீசார் வாகனங்களை பேயோடு வழியாக மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை இதற்கிடையே உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன் மாலை 3.30 மணி அளவில் சம்பவ இடத்துக்கு நேரில் வந்தார். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் புகுந்த மணலை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடற்கரையில் தற்காலிகமாக மணல் மூடைகளால் தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்றும் கூறினார். மேலும் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.10 கோடி செலவில் விரைவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன் உறுதி அளித்தார். அப்போது சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ., பிள்ளைத்தோப்பு, அழிக்கால் பகுதியில் கடல் சீற்றத்தால் 75 வீடுகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுமை வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று கூறினார். உதவி கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். நள்ளிரவு தொடங்கிய கடல் சீற்றம் மதியம் 12 மணி வரை நீடித்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்