போக்குவரத்து விதிமீறல்களின் ஆதாரங்கள் நிழற்படம் மற்றும் ஒளி, ஒலியுடன் கூடிய காணொலியாக பதிவு செய்யப்படும்.

சென்னையில் போக்குவரத்து விதிமீறலுக்கான ஆதாரங்களை பதிவு செய்யும் விதத்தில், போக்குவரத்து போலீசாருக்கு உடல் இணை கேமராக்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறையினர் 7 பேருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடல் இணை கேமரா கருவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு 98 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் மொத்தம் 201 உடல் இணை கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளும் போது காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளை களையவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இந்த கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளில் உள்ள 2 எம்பி கேமராக்கள் வழியாக காணொலி பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம். இந்தப் பதிவுகளில் நிகழ்நேர தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை தானாகவே இடம்பெறும். மேலும் கேமராக்களில் பொருத்தப்பட்டிருக்கும் 4ஜி இணைப்பு மூலமாக குறிப்பிட்ட கேமராக்களின் நிழற்பட பதிவுகளை, கட்டுப்பாட்டுறை அறை மற்றும் உயரதிகாரிகள் நேரலையில் கண்காணிக்கலாம். போக்குவரத்து அதிகாரிகள் எங்கு வழக்குப்பதிவு செய்கிறார்கள் என்பதையும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலமாக வரைபடத்தில் நேரலையில் கண்காணிக்கலாம். இந்த கருவிகளின் துணையோடு, போக்குவரத்து காவல் அதிகாரியின் முன்பு நடைபெறும் போக்குவரத்து விதிமீறல்களின் ஆதாரங்கள் நிழற்படம் மற்றும் ஒளி, ஒலியுடன் கூடிய காணொலியாக பதிவு செய்யப்படும். போக்குவரத்து விதிமீறல்களுக்கு வழக்குகள் பதிவு செய்வதில், வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையும் உறுதி செய்யலாம் என்பதுடன், வீண் விவாதங்களையும் தவிர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் பதியப்படும் காணொலி மூலமாக போக்குவரத்து காவல்துறையினருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான சந்தேகங்களை அகற்றவும் உதவும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்