சாணத்தை கொண்டு விருதுநகரில் விநாயகர் சிலைகள் தயார்

சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் இரசாயன பொருட்கள் இல்லாமல் நாட்டு மாட்டில் கிடைக்கும் சாணத்தை கொண்டு விருதுநகரில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் செப்டம்பர் 2 -ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விழா கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதற்காக பல்வேறு வடிவங்களில் ஆங்காங்கே ஏராளமான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இரசாயனம் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மோசமடைவதுடன் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது. எனவே, சிலை தயாரிப்புக்கு அரசு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. மாசு ஏற்படாத வகையில் இரசாயன வர்ணம் பூசப்படாத, களிமண், கிழங்கு மாவு, மரவள்ளிக்கிழங்கில் இருந்தும், ஜவ்வரிசி கழிவுகள் போன்றவற்றில் இருந்தும் சிலைகளை தயாரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு வருகிறது. ஆனாலும் கூட இரசாயன கலப்பை முழுமையாக தடுக்க முடியவில்லை. இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு எந்த மாசும் ஏற்படாத வகையில் நாட்டு மாட்டில் இருந்து கிடைக்கும் சாணத்தால் ஆன சிலைகளை செய்து வருகிறார் விருதுநகரை சேர்ந்த சங்கர் என்ற இளைஞர். இதுதொடர்பாக அவர் கூறும்போது, ”ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. எனவே, சிலைகளின் தேவையும் அதிகரிக்கிறது. இரசாயனம் கலந்த சிலைகளால் சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மாட்டுச்சாணத்தில் இருந்து சிலை செய்ய வேண்டும் என நினைத்தேன். என்னிடம் நாட்டு மாடுகள் உள்ளன. தற்போது மாட்டுச் சாணத்துடன் முல்தான் மட்டி பவுடர் கலந்து சிறிய அளவிலான சிலைகளை தயாரித்து வருகிறேன். இந்த சிலையில் ஏதாவது விதையையும் சேர்த்தே தயார் செய்கிறேன். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் அதனை நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசும் ஏற்படாது. அதில் உள்ள விதையில் இருந்து ஏதாவது செடி உருவாகிவிடும். இந்த ஆண்டு மக்களிடம் கிடைக்கும் ஆதரவை பொறுத்து வரும் ஆண்டுகளில் இதைவிட பெரிய சிலைகளை செய்ய திட்டமிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்