காவல்துறை மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாப்போம்-டிஜிபி திரிபாதி கடிதம்

அத்திவரதர் தரிசனத்துக்காகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரைப் பாராட்டியுள்ளார் தமிழக டிஜிபி திரிபாதி. அத்திவரதர் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆய்வாளரை, ஆட்சியர் பொன்னையா கடும் சொற்களால் திட்டிய காணொலிக் காட்சி அதிகளவில் பகிரப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் இரண்டு நாட்களுக்கு முன் காவல் துறையினரின் பணியைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டது. தற்போது தமிழ்நாடு காவல் துறையின் உயரிய பொறுப்பிலுள்ள டிஜிபி திரிபாதி காவலர்களை உற்சாகமூட்டும் விதமாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பெருமைமிக்க தமிழ்நாடு காவல் துறை, அனைத்து சவால்களையும் பணித்திறத்துடனும், விடாமுயற்சியுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் எதிர்கொண்டு வந்து இருக்கிறது. 48 நாட்கள் நீடிக்கும் அத்திவரதர் வைபவத்தின் பாதுகாப்புப் பணியானது இச்சிறப்புமிக்க காவல் படையில் பணியாற்றும் ஆண் – பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளின் உறுதி மற்றும் வெல்லமுடியாத துணிவுக்கு மற்றொரு தேர்வாகும். கடந்த ஆறு வாரங்களாக நாள்தோறும் சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் அத்திவரதரைத் தரிசிக்க வருகை தரும்போது, இவ்விழா அமைதியாக நடைபெறும் வகையிலும் பக்தர்களுக்கு உதவிடும் வகையிலும் காவல் துறையினர் மிகச் சிறப்பான பணியை ஆற்றி வருகின்றனர். நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் அற்புதமான நிகழ்வானது வெற்றிகரமான நிகழ்ச்சியாக உருமாற்றம் பெறுவதற்கான ஒரே காரணம், கடின தட்பவெட்ப நிலையை எதிர்கொண்டும், குறைந்தபட்சம் வசதிகளைக் கொண்டும் சலிக்காமல் உழைக்கும் நமது காவல் துறையால்தான் என்றால் அது மிகையாகாது. இத்தருணத்தில் 1910 ஏப்ரல் 29 அன்று பாரிஸில் தியோடர் ரூஸ்வெல்ட்டின் 'The Man in the Arena' என்ற தலைப்பிடப்பட்ட 'Citizenship in A Republic' என்ற சொற்பொழிவின் ஒரு பகுதியை மேற்கோள்காட்ட விரும்புகிறேன்… 'விமர்சனையாளரோ, ஒரு பலம்வாய்ந்த மனிதன் தடுமாறி விழும்போது சுட்டிக்காட்டுகிறவர்களோ, ஒரு செயலைச் செய்தவர் அதைவிட சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று குறிப்பிடுபவரோ ஒரு பொருட்டல்ல. முகத்தில் தூசி, வியர்வை, ரத்தம் தோய்ந்து களத்தில் நின்று துணிவுடன் நின்று முயற்சி செய்பவரையும், என்ன குறை இருந்தும் விடாமுயற்சி செய்கிறார்களே அவர்களையே ஒட்டுமொத்தப் பெருமையும் சென்று சேரும். ஏனெனில் தவறோ, தோல்வியோ இல்லாமல் முயற்சி இல்லை. ஒரு செயலை செய்ய முயற்சிப்பவனும், அதிக ஆர்வம் உடையவனும், மேலான நோக்கத்திற்காக தன்னை அர்ப்பணிப்பவனுமே இறுதியில் உயரிய சாதனை வெற்றியினை அடைவான். அவ்வாறு இல்லாமல் தோற்றாலும் பெருமையுடனேயே தோற்பான். மேலும் அவரின் இடமானது வெற்றியோ, தோல்வியோ அறியாத செயலற்ற பயந்த ஆத்மாக்களின் இடையே அமையாது'.  பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் பெருமைமிக்க நமது காவல் துறையின் உறுதித்தன்மையை மேலே நான் மேற்கோள் காட்டிய அற்புதமான வரிகள் மூலம் விவரிக்க விழைகிறேன். களத்தில் இருந்த ஒவ்வொரு காவலரும் இம்மேன்மையான தருணத்தில் வரலாற்றுடன் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். ஊடகம், சமூக வலைதளம் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை மேற்கூறப்பட்ட கருத்துகளுக்குப் போதுமான சாட்சியாக அமைந்துவிட்டன. இறுதியாக இதே கடுமையான உழைப்பையும், ஊக்கத்தையும் 17 ஆகஸ்ட் 2019ஆம் தேதி வரை எடுத்துச்செல்ல வேண்டும். ஏனெனில் ஒரு சிறிய தவறுகூட நாம் இதுவரை பெற்ற நற்பெயரைக் களங்கப்படுத்திவிடும். காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் பாதுகாப்புப் பணியில் உள்ள அனைத்து காவல் துறை அதிகாரிகளின் சிறந்த தலைமைப் பண்பை வெளியில் கொண்டுவரவும், அனைத்து காவலர்களின் திறனையும், சிறந்த சேவையும் ஒருவழிப்படுத்தவும் அனைத்து காவல் அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இங்கே பிலிப் ஷூட்டிங்கின் பொன்மொழியை வலியுறுத்த விரும்புகிறேன். நமது நாட்டின் பாதுகாப்புக்கும், கவுரவத்துக்கும் மற்றும் நலனுக்கும் எப்போதும் ஒவ்வொரு முறையும் முன்னுரிமை தர வேண்டும். உங்களின் கீழ் பணிபுரியும் காவலர்கள் கவரவும் நலன் மற்றும் சவுகரியங்கள் இரண்டாவது முக்கிய அம்சமாகக் கருத வேண்டும். ஒவ்வொரு முறையும் உங்களுடைய சொந்த வசதி, சவுகரியங்கள் மற்றும் பாதுகாப்பு எப்போதும் கடைசியில் தான் வர வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். தமிழக மக்கள் தமிழ்நாடு காவல் துறை மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கும் விதமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்ற் டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)