சாலை விதிகளை மீறினால் கடும் அபராதம்; மக்களவையில் மோட்டார் வாகன திருத்த மசோதா மீண்டும் தாக்கல்
புதுடெல்லிசட்டத்தை மீறுவோருக்கான அபராதத்தை அதிகரிக்க வகை செய்யும் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான முதல் ஆட்சியில் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. எனினும், மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இந்நிலையில், மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி . மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். மோட்டார் வாகன சட்டத்தை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பது, இணையதளம் வழியாக பழகுநர் உரிமம் வழங்குவது, காப்பீடு நடைமுறைகளை எளிமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளன.