புதுச்சேரி:லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., முன்வைத்த கோரிக்கைகள்

புதுச்சேரி:லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக, முதல்வர் தலைமையில் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. காங்., எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன், முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். கடிதத்தில், தனது ராஜ்பவன் தொகுதி குமரகுருபள்ளத்தில் பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தருவது, கல்வே காலேஜ், வ.உ.சி., பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்டுவது உள்ளிட்ட தீர்க்கப்படாத கோரிக்கைகளை பட்டியலிட்டு இருந்தார்.இந்த கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளிடம் பலமுறை பேசியும் நிறைவேற்றப்படவில்லை என்றும், பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக பிரச்னைகளை தீர்க்காவிட்டால், தொகுதி மக்களுடன் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவேன் என்றும் லட்சுமிநாராயணன் கெடு விதித்து இருந்தார். காங்., எம்.எல்.ஏ.,வின் போராட்ட அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், டில்லிக்கு சென்றிருந்த முதல்வர் நாராயணசாமி நேற்று புதுச்சேரிக்கு திரும்பினார். இதையடுத்து, லட்சுமிநாராயணன் தெரிவித்திருந்த கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளின் உயரதிகாரிகள் கூட்டத்துக்கு, முதல்வர் அலுவலகம் நேற்று மதியம் ஏற்பாடு செய்தது. இதுகுறித்து லட்சுமிநாராயணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில், முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., அரசு செயலர்கள் தர்செம்குமார், ஜவகர், பார்த்திபன், சவுத்ரி அபிஜித் விஜய் மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.லட்சுமிநாராயணன் தெரிவித்திருந்த ஒவ்வொரு கோரிக்கை குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டார்.இதுதொடர்பாக, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.,விடம் கேட்டபோது, 'ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக முதல்வர் அலுவலகத்தில் விபரம் தெரிவிப்பதாக கூறியுள்ளனர். போராட்டத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை' என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!