நூதன மோசடி - கார் உரிமையாளர்களே உஷார்!

சென்னையில் கார்களை மாத குத்தகைக்கு வாங்கி வேறு ஊர்களில் அடமானம் வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்து வந்த கும்பலில் இருவர் பிடிபட்டுள்ள நிலையில், 17 கார்களை போலீசார் மீட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் தனது மகிந்திரா சைலோ காரை சென்னை துரைப்பாக்கத்தில் “மதர் டிராவல்ஸ்” என்ற பெயரில் கார்களை வாடகைக்கு விடும் சிலம்பரசன் என்பவனிடம் மாத குத்தகைக்கு கொடுத்துள்ளார். முறைப்படி ஒப்பந்தப் பத்திரம் தயாரித்து தனது காரை இவர் ஒப்படைத்திருந்த நிலையில், சிலம்பரசன் ஓரிரு மாதங்களுக்கு வாடகைப் பணத்தை முறையாக கொடுத்து வந்துள்ளான். நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 28 நாட்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் என ஒப்பந்தம் பேசப்பட்டு இந்தப் பணப் பரிமாற்றம் நடைபெற்று வந்துள்ளது. அடுத்தடுத்த மாதங்களுக்கான வாடகைத் தொகை வராத நிலையில், சிலம்பரசனை தொடர்பு கொண்டபோது அவனிடம் சரியான பதில் கிடைக்கவில்லை என்கிறார் ஹரிகிருஷ்ணன். இதனிடையே ஜெயங்கொண்டத்தில் இருந்து ஹரிகிருஷ்ணனை தொடர்புகொண்ட ரவிச்சந்திரன் என்பவர் அவரது காரை அசோக்குமார் என்ற நபர் தன்னிடம் அடகுவைத்து 3 லட்ச ரூபாய் பெற்றுச் சென்றதாகவும் பின்னர் பணத்தை கொடுக்காமல் தலைமறைவாகி விட்டதாகவும் கூறியுள்ளார். பதறிப்போன ஹரிகிருஷ்ணன் சிலம்பரசனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அவன் மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசியுள்ளான். இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவில் ஹரிகிருஷ்ணன் புகாரளித்துள்ளார். அந்தப் புகார் துரைப்பாக்கம் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். முதற்கட்டமாக விருத்தாசலத்தில் வைத்து சிலம்பரசனின் கூட்டாளி அசோக்குமாரை போலீசார் மடக்கினர். அவனைத் தொடர்ந்து சிலம்பரசனையும் கைது செய்தனர். அயப்பாக்கத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் டில்லிபாபு என்பவனிடம் இதேபாணியில் ஏமாந்த நிலையில், அவர் கேகே நகர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கரணை, கண்ணகிநகர், நீலாங்கரை, கே.கே.நகர், மாதவரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் இதே வகை புகார்கள் பதிவாகியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிலம்பரசன், டில்லி பாபு ஆகியோர் மட்டுமல்லாது அவர்களது கூட்டாளிகளான அசோக்குமார், அன்பழகன் என ஒரே கும்பலைச் சேர்ந்த இவர்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு பகுதிகளில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். நாளிதழ்களில் கவர்ச்சியாக விளம்பரம் கொடுத்து டிராவல்ஸ் தொழிலில் முன்னேற எண்ணி கார்களை வாங்கிவிட்டு மாதத் தவணை செலுத்த முடியாமல் தவிப்பவர்களை இந்தக் கும்பல் ஆசை காட்டி, மோசம் செய்து வந்துள்ளனர். சிலம்பரசனையும் அசோக்குமாரையும் கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாகவுள்ள டில்லி பாபுவையும் அன்பழகனையும் தேடி வருகின்றனர். இதுவரை 17 கார்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை கார்களை இதுபோன்று இவர்கள் மோசடி செய்துள்ளனர் என விசாரணை நடைபெற்று வருகின்றது. பல லட்ச ரூபாய் கடன் பெற்று கார்களை வாங்குபவர்கள் அதனை முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் குத்தகைக்கோ, வாடகைக்கோ விடும்முன் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)