70 ரூபாய்க்காக.. ஒரு பச்சிளம் குழந்தையை..
திருச்சி: வெறும் 70 ரூபாய்க்காக ஒரு பச்சிளம் குழந்தை அடித்து கொல்லப்பட்ட பயங்கரம் திருச்சி மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அலகரை கல்லுப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கர். இவர் விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு நித்தீஸ்வரன் என்ற 15 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், நித்தீஸ்வரனை தூக்கிவைத்துக்கொண்டு வீட்டின் அருகே நின்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் அங்கு வந்து ரெங்கரிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில், ரெங்கரின் உறவினர் செந்தில் என்பவர், ஆனந்தனின் சட்டை பையில் கையைவிட்டு, 70 ரூபாய் பணத்தை எடுத்து கொண்டார். இதனை கண்ட ரெங்கர், 'ஏன் ஆனந்தனிடம் பணத்தை எடுத்தாய்' என செந்திலிடம் கேட்டார். இது ரெண்டு பேருக்கும் வாய்த்தகராறு வரை வந்துவிட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செந்தில் அருகில் கிடந்த மூங்கில் கம்பை எடுத்து ரெங்கரை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். அந்த அடி, தூக்கி வைத்துக் கொண்டிருந்த 15 மாத குழந்தை நித்தீஸ்வரன் மீதும் விழுந்தது. இதில் ரெங்கனுக்கு தலையில் காயம், குழந்தைக்கு உடம்பெல்லாம் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, சிகிச்சைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டான். இதுகுறித்து தொட்டியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, செந்திலை கைது செய்தனர். வெறும் 70 ரூபாய்க்காக ஒரு தகராறு ஏற்பட்டதும், அதன் மூலம் 15 மாத குந்தை அடித்து கொல்லப்பட்டதும், மாவட்ட மக்களை கொதிப்பில் ஆழ்த்தி உள்ளது.