5,048 பேருக்கு பணம் பெற்று சான்றிதழ் தந்தது அம்பலம் *பல்கலை. அதிகாரிகள் உள்பட 7 பேர் விரைவில் கைது?

மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலை கல்வித்துறையில் 5,048 பேருக்கு பணத்தை பெற்றுக்கொண்டு சான்றிதழ் வழங்கியதும், இதில் ₹50 கோடி அளவுக்கு மெகா முறைகேடு நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதில் பல்கலை. அதிகாரிகள் 3 பேர் உள்பட 7 பேர் கண்டறியப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வித்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றன. இதன்பேரில் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தொலைதூர கல்வி இயக்கக அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், 2014-15ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வி ஆண்டில் பட்டப்படிப்பில் சேர 253 மாணவர்கள், விண்ணப்பத்தில் எந்தவிதமான சுயகுறிப்புகளையும் தெரிவிக்காமல் தங்களது புகைப்படம் மற்றும் முகவரியை மட்டுமே குறிப்பிட்டிருந்ததும், அதேநேரம் அவர்களுக்கு படிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்ததும் முதற்கட்டமாக தெரிந்தது. பட்டியல் தயாரிப்பு: தொடர் விசாரணையில், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மதிப்பெண், புரொவிஷனல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், அவர்கள் தேர்வு எழுதியதற்கான எந்த ஆதாரத்தையும் பார்க்க முடியவில்லை. தொடர்ந்து விசாரணை தீவிரமடைந்தது. இதைத்தொடர்ந்து முதலில் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ராஜராஜன், கணினி பிரிவு கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கார்த்திகைசெல்வன் ஆகிய 3 பேரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இந்த விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு என்ற பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தயாரித்தனர். கேரளாவை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு : இந்த முறைகேட்டில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த 3 பேர் தவிர, கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்த நிஜி, அப்துல் அஜீஸ், ஏ.கே.சுரேஷ், ஜெயப்பிரகாசம் ஆகிய 4 பேருக்கும் தொடர்பிருப்பது தெரிந்தது. இந்த 4 பேரும் கேரளாவில் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையம் நடத்தி வருகின்றனர். இந்த 7 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, லஞ்ச ஒழிப்புத்துறை, பல்கலைக்கழகத்திற்கு கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பே கடிதம் வழங்கி இருந்தது. பல்கலைக்கழகம் ஆட்சிமன்றக்குழுவை கூட்டி விசாரணை நடத்தி நடவடிக்கைக்கும் முடிவெடுத்தது. ஆனால் இந்த முடிவை உடனடியாக செயல்படுத்தவில்லை. ஆளுங்கட்சியினரின் அரசியல் குறுக்கீடு காரணமாக நடவடிக்கை எடுக்கவில்லை. காலதாமதப்படுத்தி வந்துள்ளனர். தற்போது அனுமதி கிடைத்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது. 7 பேரும் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு ஒரு லட்சம் : தொடர்ந்து நடந்த விசாரணையில் 2014-15ம் ஆண்டில் 5,048 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு குறைந்தது ₹1 லட்சம் என, ₹50 கோடிக்கு மேல் மெகா முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்த கல்வி கட்டணமும் செலுத்தாமல், வங்கிகளில் முறைகேடு செய்து கணினியில் திருத்தம் செய்யப்பட்டு, ஒவ்வொருவரிடமும் ₹1 லட்சம் பெற்று சான்றிதழ் வழங்கி இந்த முறைகேடு நடத்தப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு செயலாளர் பேராசிரியர் முரளி கூறும்போது, ''பதிவுக்கட்டணம் பெற்றது துவங்கி சான்றிதழ்கள் வழங்கியது வரை பல்வேறு முறைகேடுகள், மதுரை காமராஜர் பல்கலை தொலைதூரக் கல்வித்துறையில் நடந்திருக்கிறது. ₹50 கோடி வரை நடந்துள்ள இந்த முறைகேட்டின்பேரில் கடும் நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். காமராஜர் பல்கலை பாரம்பரியமானது. ஏழை மாணவர்கள் தொலைநிலைக்கல்வியில் சேர்ந்து, வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வழியாக இருந்தது. ஆனால் இங்கு துணைவேந்தர் செல்லத்துரை இருந்த காலகட்டத்தில், குற்றப்பின்னணி உள்ள பலர் முக்கிய பொறுப்பில் பல்கலைக்கழகத்தில் அமர்த்தப்பட்டதன் விளைவே இந்த முறைகேட்டுக்கு வழியாக அமைந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையும், அரசும் முறையான விசாரணை நடத்திட வேண்டும். அரசியல் தலையீடின்றி இந்த விசாரணை அமைய வேண்டும்'' என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)