அ.தி.மு.க.,வில் அதிருப்தி குரல் எல்லாமே அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கு தானா?
அ.தி.மு.க., தலைமை, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டும், முக்கியத்துவம் அளிப்பது, கட்சியின் பிற நிர்வாகிகளிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.ஜெயலலிதா இருந்த வரை, அ.தி.மு.க.,வில், யாருக்கு, எப்போது, எந்த பதவி வரும் என்பது தெரியாது. அதேபோல, பதவியில் இருப்போருக்கு, எப்போது பதவி பறிபோகும் என்பதும் தெரியாது.இதற்கு நேர் மாறாக, தி.மு.க.,வில், மாவட்ட செயலர்கள், சிற்றரசர்கள் போல் செயல்பட்டனர். அவர்களை மீறி, மாவட்டத்தில், எந்த நிர்வாகியையும், கட்சி தலைமை மாற்றாது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, ஜெயலலிதாவே அனைத்து முடிவுகளையும் எடுத்தார். ஜெ., - கருணாநிதி மறைவுக்கு பின், காட்சிகள் மாறி விட்டன. தி.மு.க.,வில், மாவட்ட செயலர்களை மீறி, பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அ.தி.மு.க.,வில், மாவட்ட செயலர்களாக உள்ள அமைச்சர்களை மீறி, கட்சி தலைமையால், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை .லோக்சபா தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் போன்றவற்றில், மாவட்ட செயலர்களே, வேட்பாளர்களை தேர்வு செய்தனர்.இதன் காரணமாக, சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் மற்றும் துணை முதல்வரை புகழ்வதுடன், தங்கள் மாவட்ட செயலர்களுக்கும், புகழாரம் சூட்ட துவங்கி உள்ளனர்.அமைச்சர்கள், தங்கள் மாவட்டத்தில், தங்களை மீறி யாரும் முக்கிய பதவிகளுக்கு வந்து விடக்கூடாது என்பதில், குறியாக உள்ளனர்.உதாரணமாக, தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம், சமூக நல வாரியம், குடிநீர் வாரியம் உட்பட, பல்வேறு வாரியத் தலைவர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.இப்பதவிகள், அமைச்சர் பதவிக்கு நிகரானவை. இப்பதவியை பெற, கட்சியில் பலர் முயற்சித்தும், அமைச்சர்களை மீறி, யாரையும் நியமிக்க, கட்சி தலைமையால் முடியவில்லை . சமீபத்தில், கால்நடைத்துறை அமைச்சர், ராதாகிருஷ்ணனிடமிருந்த, மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டது. அப்பதவி, துணை சபாநாயகர் ஜெயராமனுக்கு வழங்கப்பட்டது. இதனால், ராதாகிருஷ்ணன் கோபம் அடைந்தார். அவரை சமாதானப்படுத்த, தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவன தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியில், முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர், பதவிக்காக காத்திருக்கையில், அமைச்சருக்கு பதவி கொடுக்கப்பட்டது. கட்சியில், முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர், பதவிக்காக காத்திருக்கையில், அமைச்சருக்கு பதவி கொடுக்கப்பட்டது.இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறிய தாவது: கட்சிக்காக உழைத்தவர்கள் புறக்கணிக்கப்படு கின்றனர்.திறமையானவர்களுக்கு பதவி கொடுத்தால், தங்களுக்கு சிக்கல் வரும் எனக் கருதி, மாவட்ட செயலர்கள் மற்றும் அமைச்சர்கள் புறக்கணிக்கின்றனர்.வாரிய தலைவர் பதவி கொடுக்க வாய்ப்பிருந்தும், அதை கொடுக்க, அமைச்சர்கள் விரும்பாததால், கட்சி தலைமை, யாரையும் நியமிக்காமல் உள்ளது.செய்தி தொடர்பாளர்கள் என, ஒன்றிரண்டு பேர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது, 15க்குமமேற்பட்டோர், செய்தி தொடர்பாளர் களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.ஊடக விவாதத்தில் பங்கேற்க செல்வோரையும், செய்தி தொடர்பாளர்களாக அறிவித்துள்ளனர். கட்சியில் பலர் பதவி இல்லாமல் இருக்க, அ.ம்.மு.க.,வில் இருந்து வந்த பெண் நிர்வாகிக்கு, மறுநாளே செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. அமைச்சர்கள் பரிந்துரை இருந்தால், உடனுக்குடன் கட்சியில் பதவி வழங்கப்படுகிறது. இல்லையெனில், கண்டுகொள்வதில்லை. சமீபத்தில், தென் சென்னை வடக்கு மாவட்டத் தில், நிர்வாகிகள் மாற்றப்பட்டனர். மாவட்ட செயலர், சத்யா, தனக்கு வேண்டியவர் களை மட்டும் நியமித்துள்ளார். இதனால், கட்சியினர் முழுமையாக அதிருப்தி அடைந்துள்ளனர்.இதுபோல், கட்சி தலைமை செயல்பட்டால், ஆட்சி நீடிக்கலாம்; கட்சி இல்லாமல் போய் விடும். எனவே, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., அணி என்று பாரபட்சம் பார்க்காமல், திறமையானவர் களுக்கு, பதவி வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.