சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் பின்பற்ற வேண்டிய 'ஓர் அலசல்

கடந்த சில நாள்களுக்கு முன், நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நீண்டநாள்கள் கழித்து சந்தித்ததால், எங்களது உரையாடல் பல மணிநேரம் நீடித்தது. எங்களது பேச்சின் நடுவே நண்பனின் நான்கு வயது மகன் அவ்வப்போது தொந்தரவு செய்துகொண்டிருந்தான். ஒருகட்டத்தில் அவனது தொல்லையைத் தாங்கமுடியாத நண்பன், தன் அலைபேசியை அவனிடம் கொடுத்து, விளையாடச் சொன்னான். சிறிது நேரத்துக்குப் பிறகு வீட்டுக்குச் செல்லலாம் என முடிவெடுத்தேன். கிளம்புவதற்கு முன் குழந்தையை ஒருமுறை கொஞ்சிவிட்டுச் செல்லலாம் என இருவரும், அவனருகே சென்றோம். அப்போது சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி எங்கள் இருவருக்கும் காத்திருந்தது. யாரோ இருவர், ஒரு நபரைத் ரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கிக் கொண்டிருந்த சிசிடிவி காட்சி நண்பனின் மொபைலில் வீடியோவாக ஓடிக்கொண்டிருந்தது. நண்பனின் குழந்தை, அதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். உடனே ஆத்திரப்பட்ட நண்பன், `உன்னை கேம்ஸ்தானே விளையாடச் சொன்னேன், என்ன பார்த்துட்டு இருக்க' எனக் கோபமாகக் கத்தினான். உடனே, பதறிப்போன குழந்தை மொபைலை நண்பனின் கையில் கொடுத்துவிட்டு, அழ ஆரம்பித்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் கனத்த மௌனத்துடன் அங்கிருந்து நான் கிளம்பினேன். விவரம் தெரியாத குழந்தைகள் மட்டுமல்ல, நன்கு விவரமறிந்த பெரியவர்களும் இன்று இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். கொலை, கொள்ளை, பெண்கள் மற்றும் குழந்தைகளை சித்ரவதைப்படுத்தும் வீடியோ காட்சிகளை சர்வசாதாரணமாகப் பார்த்துவருகிறோம். யூடியூபில் சென்று பார்த்தால் நெஞ்சைப் பதறவைக்கும் வன்முறைச் சம்பவங்களின் வீடியோ காட்சிகளைத்தான் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். தற்போது, சிசிடிவி பதிவுகளும் உடனுக்குடன் கிடைத்துவிடுவதால், மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களிலும் சோஷியல் மீடியாவிலும் வன்முறைக் காட்சிகள் அடங்கிய வீடியோக்களே அதிகமாக வைரலாகின்றன. முன்பெல்லாம் இதுபோன்ற கொடூரமான வீடியோக்களைப் பார்க்காமல் கடந்தும், பார்க்கும்போது முகம் சுளித்து இடைநிறுத்தியும் வந்த நாம், இன்று சர்வசாதாரணமாக அதுபோன்ற வீடியோக்களைப் பார்க்கப் பழகிவிட்டோம். குற்றங்கள் காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. டிஜிட்டல் யுகத்தில் அவை வெளியே தெரியத் தொடங்கியிருப்பது ஒருவகையில் நன்மைதான். ஆனாலும், கொடூரங்களைப் பார்த்துப் பழகி இலகுவாக அணுகும் போக்கு அதிகரிப்பதுடன் ரசிக்கும்போக்கு உருவாகிவிடுமோ என்கிற அச்சமும் எழாமல் இல்லை மனநல மருத்துவர் ''ஒரு விஷயத்துக்கு தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்வது என்பது மனிதர்களுக்கு இயல்பாக உள்ள ஒரு குணாதிசயம்தான். உதாரணமாக, சென்னையிலேயே பல வருடங்கள் வாழ்ந்துவரும் ஒரு நபர் சென்னை வெயிலின் கொடுமை பற்றியோ, சிக்னலில் காத்திருப்பது குறித்தோ பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார். ஆனால், புதிய நபர்கள் அல்லது எப்போதாவது வந்து போகிறவர்களுக்கு அது கஷ்டமாகவும் எரிச்சலாகவும் இருக்கும். பிளாட்பாரத்தில் படுத்து உறங்கும் ஒரு நபருக்கு வாகனச் சத்தங்கள் இடையூறாக இருக்காது. இது ஒருவித கற்றல்முறைதான். பல விஷயங்களில் இது மிகவும் பலனளிக்கும். மனோதத்துவ ரீதியாக இதை 'ஹேபிச்சுவேஷன்' (Habituation) என்று சொல்வோம். நல்ல விஷயங்களைப் பொறுத்தவரை, பெரிய பிரச்னை இல்லை. ஆனால், தீய விஷயங்களுக்கு அப்படிப் பழகும்போதுதான் அது ஆபத்தாக முடிகிறது. உதாரணமாக, வன்முறைகள் நிறைந்த வீடியோ கேம்களில் தாங்களே ஒரு கதாபாத்திரங்களாக மாறி விளையாடிப் பழகியவர்களுக்கு, பிறரைத் தாக்குவதில் தயக்கம் இருக்காது. வன்முறைகள் குறித்து பெரிய அச்சம் இருக்காது. ஆனால், ஒருவர் தான் சம்பந்தப்படாத, வன்முறைக் காட்சிகளைப் பார்க்கும்போது அத்தகைய பழக்கத்துக்கு ஆளாக வாய்ப்பு மிகவும் குறைவுதான். எனினும், 'அதுபோன்ற ஆபத்தான நிலை நமக்கு வந்தால் என்னாகும்?' என்கிற தேவையற்ற அச்சத்தையும் பதற்றத்தையும் அது உருவாக்கும். ஒரு வீடியோ அதிகமாகப் பார்க்கப்படுவதற்குக் காரணம், அதிலுள்ள புதுமையான விஷயங்களும், சோகம், துயரம், காமம் போன்ற உணர்ச்சிகளைத் தூண்டும் விஷயங்களும்தான். அத்தகைய வீடியோக்களைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளும் தற்போது அதிகரித்திருக்கிறது. இது மிகவும் அபாயமான ஒன்று'' என்றவரிடம் இதுபோன்ற விஷயங்களில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்று கேட்டோம்.''சமூக வலைதளங்களில், இதுபோன்ற வீடியோக்களை பகிர்வதற்கு முன் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒரு விஷயத்தைப் பரப்புவதற்குமுன் நன்றாக யோசிக்க வேண்டும். நாம் என்ன பதிவிடுகிறோம் என்பதைப் பொறுத்தே நம்முடைய குணாதிசயங்களைக் கணிப்பார்கள்.தவறான ஒரு விஷயத்தைப் பரப்பும்போது, நாமும் அப்படிப்பட்ட சிந்தனையுடையவர்கள் என்கிற எண்ணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஒருமுறை அப்படி தவறான அபிப்ராயம் ஏற்பட்டால் மீண்டும் அதை மாற்றுவது கடினம். வெளிநபர்களை விடுங்கள்... குடும்ப நபர்கள், குழந்தைகளிடம் ஒரு தவறான அபிப்ராயத்தை அது உண்டாக்கும்பிறர் செய்யும் ஒரு விஷயம் நம்மை முகம் சுளிக்க வைக்கிறதென்றால், அதுபோன்ற விஷயத்தை நாமும் செய்யக் கூடாது. அதேபோல, உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளாமல் எந்தவொரு விஷயத்தையும் பகிரக் கூடாது. 'டி- ஷர்ட்' ரூல் என்ற விதி ஒன்று இருக்கிறது. அதாவது, சமூக வலைதளங்களில் நாம் பகிரும் ஒரு விஷயத்தை, நம்முடைய ஆடையில் எழுதி வைத்துக்கொண்டு வெளியே சுற்றுவோமா என்பதை யோசிக்க வேண்டும்.அப்படிச் சுற்றமுடியாத விஷயங்களைக் கண்டிப்பாகப் பகிரக்கூடாது. சமூக வலைதள ஐ.டியும் நம் உடல், உருவத்தின் நீட்சிதான் என்பதை உணர வேண்டும். தேவையற்ற, பிறருக்குப் பயன்படாத விஷயங்களைப் பகிரக்கூடாது என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தனிநபருக்கு மட்டுமல்ல, நிறுவனங்களும் இவற்றைப் பின்பற்ற வேண்டும்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்