‘சந்திரயான்-2’ அப்துல் கலாமின் கனவு பலித்தது: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

இன்று (ஜூலை 27-ந்தேதி) டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினம். தனது பூத உடல் மறைந்தாலும் புகழுடம்பால் மறையாது வாழும் நிலையான வாழ்க்கை, நித்தம் நித்தம் மற்றவர்கள் நினைத்து வாழ்த்தும் வளமிகு வாழ்க்கை, மண்ணில் பிறந்து, வாழ்ந்து மறைந்த எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நல்ல மக்கள் தலைவர்களுக்கு, நாட்டின் ஜனாதிபதிகளுக்கு, சிறந்த விஞ்ஞானிகளுக்கு, இளைஞர்களின் எழுச்சி மிகு வழிகாட்டிகளுக்கு, அறிவைத் தூண்டும் எழுத்தாளர்களுக்கு, மக்களை கட்டிப்போடும் பேச்சாளர்களுக்கு என்று மண்ணில் வாழ்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே அந்த கொடுப்பினை உண்டு. தனக்கே உரிய பாணியில் தன்னகத்தே கொண்டவராய் வாழ்ந்த மாமனிதர், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம். எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் தனது சிறப்பைக் காட்டி மின்னும் வைரம் போன்றவர்.ஒரு தனி மனிதனின் உயர்வுக்கும், ஒரு பெரிய குழுவாய் இந்திய விண்வெளித்துறை சாதித்து வருவதற்கும், விதையாய்த் தூவி விருட்சமாய் விரிக்கும் வித்தகர் கலாமின் ஒரு பங்களிப்பையும், அக்கினிச் சிறகுகள் தந்தவரின் லட்சியத் தீ மூட்டும் லாவகத்தையும், கனவு காணுங்கள் என்று சொன்னவரின், கனவுக்கு செயல் கொடுக்க வீரியம் ஊட்டிய வித்தையையும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாய் இங்கே உங்களிடம் பகிர்கிறேன்.ஜூலை மாதம் தனது 27-ந் தேதி 2015-ம் ஆண்டு இந்திய இளைஞர்களின் கனவு நாயகர் அப்துல் கலாமை களவாடி சென்றுவிட்டது. நான்கு வருடங்கள் உருண்டோடிய பின், அதே ஜூலையில், நூற்று முப்பது கோடி இந்தியர்களின் நெஞ்ச கனவுகளை சுமந்து கொண்டு நிலவு நோக்கி பறந்து செல்லும் சந்திரயான்-2, விண்ணில் ஏவப்பட்டபோது, கலாம் என்னை பார்த்து கண்சிமிட்டி புன்னகைத்ததாய் உணர்ந்தேன். எனது நினைவு பறவை காலம் என்ற வரையரையில் பதினைந்து வருடங்கள் பின்னோக்கி பறந்து, வான் வெளிவழியே சிறகடித்து உதய் உதய்ப்பூர் அரண்மனைக்கு சென்று அமர்கிறது. அந்நாள் ஜனாதிபதி முனைவர் அப்துல்கலாம் புன்முறுவலுடன், “வாருங்கள் மயில்சாமி அண்ணாதுரை, வந்து இங்கு அமருங்கள்”, என்று அருகில் அமர வைக்கிறார். நான் தயங்கியபடி அமர்கிறேன். சில நிமிடங்களுக்கு முன்புதான், அரண்மனையின் பெரிய தர்பார் மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச அறிவியலாளர்களை உள்ளடக்கிய பேரவையில், பன்னிரண்டு அறிவியல் கருவிகளை உள்ளடக்கிய, சந்திரயான்-1-ன் வரைவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றிருந்தேன். அந்த அவையின் நாயகராய் கலாமும் இருந்தார். தனியாக நம்மை பாராட்ட போகிறார், அதற்கு நாம் எப்படிப் பதிலளிப்பது என்று எனது மனம் திட்டமிட ஆரம்பித்துவிட்டது. “நீங்கள் கொடுத்திருக்கும் சந்திரயான்-1 திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால்... இது இந்திய மக்களின் குடியரசுத் தலைவராய் அப்போது இருந்தாலும், 70-80-களில் எஸ்.எல்.வி.யின் முதல்திட்ட இயக்குனராக இந்திய விண்வெளித் திட்டங்களுக்கு முதலில் அடிக்கல் நாட்டி வழிகாட்டிய அப்துல் கலாம்.இதயம் பக்கென்று துடிக்க மறந்ததாய் உணர்ந்தேன். ஆனால்... என்கிறார் கலாம். நம் திட்டத்தில் அப்படி என்ன குறை?. “சந்திரயான்-1 கலம் ஏறத்தாழ 3,84,000 கி.மீ பயணித்து, நிலவைத் தொடாமல், நூறு கிலோமீட்டர் தூரத்தில் சுற்றி கொண்டிருப்பது போல் இருக்கும் உங்கள் திட்டத்தில் ஒரு முழுமை இருப்பதாக எனக்குத் தெரியலையே..”, - கலாம்.“சார். நம்ம பி.எஸ்.எல்.வி.யை வைத்துக்கொண்டு இதுவே அதிகம். நிலவைத் தொட வேண்டுமானால் சந்திரயான்-1 ன் எடை கூடி விடும். அப்புறம் நிலவு வரை செல்வதே சிரமமாகிடும் சார்”-, நான்“சிரமப்படாமல் சிகரத்தை தொட முடியுமா?”-, கலாம் தனது சிறு புன்னகையுடன்.சிறிய யோசனைக்கு பின், தயங்கியபடி நான், “நாம் நிலவுக்கு எடுத்துச் செல்ல இருக்கிற 12 கருவிகளில் ஐந்தோ ஆறோ போதுமென்று அறிவித்து விடுவோம். பின் மற்றவைகளை கழட்டி விட்டு விட்டால் நீங்கள்சொல்லியபடி நிலவைத் தொட்டுவிடலாம் சார்” “அதுக்கு மயில்சாமி அண்ணாதுரை எதுக்கு, நம்ம ஊர் ஆற்றில் பரிசல் ஓட்டும் சகோதரர்கள் கூட அதைச் செய்வார்கள் தானே. கொஞ்சம் மாற்றி யோசிங்களேன்?” “சார் அப்படின்னா ஒன்னு செய்யலாம், திட்டம் இப்போது மற்றவர்கள் முன்னிலையில் அறிவித்தபடி எல்லா கருவிகளுடனும் அப்படியே நிலவைச் சுற்றி வரும்படி இருக்கட்டும். ஆனால் அவற்றுடன் ஒரு சிறு களனை சந்திரயான்-1-ல் பொருத்தி அதை நிலவில் மோதும்படி செய்யலாமா?” “இப்போதைக்கு இது சரிதான் ஆனால். சந்திரயான்-2 இந்தியாவின் பெருமையை உலகிற்கே சொல்ற மாதிரி மெதுவாக நிலவில் இறங்கி வலம் வரணும், அதுவும் 2020-க்கு முன்பாகவே-” கலாம். “கண்டிப்பா சார். சந்திரயான்1-லே கூட இந்தியாவின் பெருமையை உலகம் மெச்சிச் சொல்லும் படியாச் செஞ்சு காமிப்போம் சார்”- நான். “வாழ்த்துகள். பார்ப்போம் மயில்சாமி” நான்கு வருடங்கள் உருண்டோட, 14 நவம்பர், 2008, இப்போது பெங்களூரு, சந்திரயான்-1 தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் நான். சண்டிகாரில் இருந்து தனி விமானத்தில் பறந்து வந்த கலாம், கண்ணாடி தடுப்புக்கு பின்னால், மாதவன் நாயர், அலெக்ஸ், ராதாகிருஷ்ணன் போன்ற அன்றைய மூத்த அறிவியலாளர்கள் புடை சூழ பெரிய திரைகளை பார்த்தபடி. கலாமின் தூண்டுதலால் முளைத்த “சந்திரயானின் மோது கலன்”, தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து அனுப்பிய கட்டளைக்கு பணிந்து சமர்த்தாய், தாய்க் கலத்திலிருந்து பிரிந்து, நிலவின் தரை நோக்கி விழுந்தது. கீழே விழ, விழ, மோது கலனில் வைத்திருந்த ஒரு கருவி, நிலவின் மிக மிக மெல்லிய வளிமண்டலத்தில் நீரினால் தோன்றிய ஈரப்பதம் இருப்பதை காட்டும் சமிக்ஞை, 18 என்ற பொருமண் எண்ணை காட்டி வலுத்தது. அது ஒரு சரித்திரம் படைக்கும் சமிக்ஞை என்று எனது மனது துள்ளிக்குதித்தது. முடிவாக மூவர்ண கொடியுடன் பயணித்து நிலவின் தரையில் மோதி உடைந்தது அந்தக்கலன். ஒட்டுமொத்த வெற்றிப்புன்னகையுடன் வெளியே வருகிறேன். கலாம் கைகுலுக்குகிறார். வாழ்த்தப் போகிறார் என்று அவர் கண்பார்த்துப் புன்னகைக்கிறேன். “அடுத்தது என்ன?” கேட்டது கலாம். “சந்திரயான்-2 சார்”, சுதாரித்துக் கொண்ட நான். “வெரிகுட், சந்திரயான்-2 நிலவின் தரையில் மெதுவாக இறங்கி வலம் வரவேண்டும்”. “கண்டிப்பா சார், உதய்ப்பூரில் நீங்க சொன்ன மாதிரி உலகமே மூக்கில் விரல் வைக்கும்படி சந்திரயான்-2 செய்யும்சார்”, -நான். “2020-க்குள் நிலவில் சந்திரயான்-2 இறங்க எனது வாழ்த்துகள்”. கலாம் சொன்னது 14 நவம்பர் 2008-ன் முன்னிரவில். பதினோரு ஆண்டுகள் பறந்துவிட்டது. சார் இன்று உங்களை நாடு நினைக்கும் போது, உங்களின் கனவுக் கட்டளைகளில் ஒன்றை நிறைவேற்ற, நிலவின் தென் துருவத்துக்கருகில் இறங்கி சரித்திரம் படைக்க சந்திரயான்-2 பயணித்து கொண்டிருக்கிறது. உங்கள் நினைவுகளுடன் நாங்களும், அடுத்த இலக்கை நோக்கி.... விஞ்ஞானி மயில்சாமிஅண்ணாதுரை, துணைத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழிற்நுட்ப மையம். 'சந்திரயான்-2' அப்துல் கலாமின் கனவு பலித்தது:


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்