முத்தலாக் சட்டம்... 211 நாள்களில் அ.தி.மு.க அடித்த டபுள் ஸ்டாண்ட்!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்திலிருந்து தேர்வுபெற்ற அன்வர் ராஜா, முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்துப் பேசினார். இப்போதைய நாடாளுமன்றத்திற்கு தேனியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார் அதை ஆதரித்துப் பேசியிருக்கிறார்.''முத்தலாக் தடை மசோதாவை அ.தி.மு.க. எதிர்க்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். முத்தலாக் விஷயத்தில் கண்மூடித்தனமாகச் செயல்படுகிறது மத்திய அரசு. வகுப்புவாத அரசியலைச் செயல்படுத்த நினைக்கிறது பி.ஜே.பி''இது, 2018 டிசம்பர் 27-ம் தேதி நாடாளுமன்றத்தில் அன்வர் ராஜா ஆற்றிய உரை. ''முத்தலாக் தடை மசோதா மூலம் பெண்களுக்குச் சமூகத்தில் சம உரிமைகளையும், நல்வாய்ப்புகளையும் ஈட்டித்தரும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள பாலினச் சமத்துவத்துக்கு, இந்த முத்தலாக் சட்டத் திருத்த மசோதா மேலும் வலு சேர்க்கும். சமூகச் சடங்குகளைப் பெண்கள்மீது திணிக்காமல், சம உரிமைகளை வழங்கிடும்'' இது, 2019 ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் ஆற்றிய உரை.இந்த இரண்டு உரைகளையும் ஒரே கட்சிதான் பேசியது. முன்னது கடந்த நாடாளுமன்றம். பின்னது இப்போதைய நாடாளுமன்றம். டிசம்பர் 27-ம் தேதிக்கும் ஜூலை 25-ம் தேதிக்கு இடைப்பட்ட 211 நாள்களில் தன் நிலைப்பாட்டை அ.தி.மு.க. ஏன் மாற்றிக் கொண்டது? 'முத்தலாக் விஷயத்தில் எடப்பாடி, பன்னீர்செல்வம் ஆகியோர் நிலைப்பாட்டைத்தான் தெரிவிக்கிறேன்'' எனச் சொல்லி அன்றைக்கு முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்துப் பேசினார், அன்வர் ராஜா. அந்தப் பன்னீர்செல்வத்தின் மகன் இப்போது அதே முத்தலாக் மசோதாவை ஆதரித்துப் பேசுகிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? நாடாளுமன்றத்தில் அன்வர் ராஜா ஆங்கிலத்தில் உரையாற்றிய பிறகு தமிழிலும் பேனார். ''முத்தலாக் மசோதா, முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் நேரடியாகத் தலையிடுகிறது. இது, முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இறைவனுக்கே எதிரானது. முத்தலாக் மசோதாவில் 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கும் பிரிவுக்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது'' என்றெல்லாம் சீறிவிட்டு, எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளையும் மேற்கொள் காட்டினார், அன்வர் ராஜா. நாடாளுமன்றத்தில் அன்வர் ராஜா ஆற்றிய உரையை 'முத்தலாக் உரிமை மீறும் செயல்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்கள். அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு அப்போதைய மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமை தாங்கினார். செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயக்குமார், நிலோபர் கபில் என ஆறு அமைச்சர்கள் அந்த விழாவில் பங்கேற்றனர். அந்த விழாவில் பேசிய வேலுமணி, “நாடாளுமன்றத்தில் பேசி நமது நிலைப்பாட்டை எடுத்துரைக்க வேண்டும் என அன்வர் ராஜாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் அனுமதி வழங்கினார். அன்வர் ராஜாவின் உரை வீரமிக்கது'' என்றார். “அம்மாவின் வழியில் செயல்படும் அரசு, சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும். அ.தி.மு.க-வின் கொள்கை என வரும்போது நாங்கள் எப்போதும் அம்மாவின் வழியில் உறுதியாக இருப்போம்” என அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார் அமைச்சர் தங்கமணி. இப்படி முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிராக இருந்த அ.தி.மு.க-வின் நிலைப்பாடு அப்படியே மாறிவிட்டது. தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணிகள் மாறுவது அரசியலில் நடக்கும் சம்பிரதாயம். ஆனால் நாடாளுமன்றத்துக்கு நாடாளுமன்றம் கொள்கைகளையே மாற்றுவது அரசியலில் இப்போது எழுதப்படும் புது தியரி. அந்த தியரியை அ.தி.மு.க இப்போது எழுத ஆரம்பித்திருக்கிறது.முத்தலாக் தடை மசோதாவை ஆதரித்துப் பேசிய ரவீந்திரநாத் தன் பேச்சில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். "சிலர் கடவுள் இல்லை என்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள்தான், கோயிலுக்குப் போகும்போது, நமக்கு முன்பாக முதல் வரிசையில் நின்று கடவுளைத் தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இப்படி இரட்டைவேடம் போட்டு மக்களைக் குழப்புகிறீர்கள்?'' என்றார். இரட்டை வேடம் பற்றியெல்லாம் பேசிவிட்டு, முத்தலாக் விஷயத்தில் ரவீந்திரநாத்தே இரட்டைவேடம் போட்டிருக்கிறார். கடவுள் இல்லை எனச் சொல்லிவிட்டு கோயிலில் முன்வரிசையில் நிற்பவர்களை தன் பேச்சில் குறிப்பிடும்போது ''டபுள் ஸ்டாண்ட் எடுக்கிறார்கள்'' என்கிறார், ரவீந்திரநாத். முத்தலாக் தடை விஷயத்தில் அ.தி.மு.க இப்போது எடுத்திருப்பதும் அக்மார்க் டபுள் ஸ்டாண்ட்தான். 'தவறு என்பது தவறிச் செய்வது; தப்பு என்பது தெரிந்துசெய்வது... தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்; தப்பு செய்வதன் வருந்தியாகணும்' என அன்வர் ராஜா பாடிய எம்.ஜி.ஆர் பாடலில் இன்னோரு சரணமும் உண்டு. "அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப்போல் அன்புக்கு வணங்கு வள்ளலாரைப்போல் கவிதைகள் வழங்கு பாரதியைப்போல் மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாவைப்போல் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி!"-எஸ்.ஏ.எம். பரக்கத் அலி


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்