அமைச்சர் குற்றச்சாட்டு- எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக சூழலை ஏற்படுத்த தமிழக எம்.பி.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவையில் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். இந்த விவகாரத்தில் விவசாயிகளை திமுக எம்.பி.க்கள் தூண்டிவிடுவதாக அமைச்சர் தங்கமணி கூறியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டபேரவையில் நேரமில்லா நேரத்தின்போது திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்கும் விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இலங்கைக்கு கடலுக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்வதாகவும், அதுபோல பூமிக்கடியில் மின்சார வயர்களை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் கடந்த இரு நாட்களுக்கு முன் கேட்டுக்கொண்டதை குறிப்பிட்டு, மின்சாரத்துறை அமைச்சர் பேசினார். மதுரையில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்கு கடலுக்கு கீழே கேபிள் பதிப்பதற்கு 7 மடங்கு செலவு அதிகமாவதாக அவர் குறிப்பிட்டார். இதனால், உயர் மின்கோபுரம் அமைத்து தான் கொண்டு செல்லமுடியும் நிலை உள்ளது என்றார். இந்த சூழலில், தமிழகத்திற்கு வரும் மின்சாரத்திற்கு உயர்மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என, திமுக எம்.பி.க்கள் சிலர் விவசாயிகளை தூண்டிவிடும் வகையில் பேசிவருவதாகவும் தங்கமணி கூறினார். அதேசமயம், எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன் பேசிவருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். திமுக எம்.பி.க்களை தரக்குறைவாக பேசியதாக கூறி, அமைச்சர் தங்கமணியின் பேச்சுக்கு திமுக உறுப்பினர் செந்தில்பாலாஜி எதிர்ப்பு தெரிவித்தார்அதிமுக உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி.க்கள் போராட்டத்தை தூண்டுவதாக அமைச்சர் தெரிவித்த கருத்திற்குதான் உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பேச முற்பட்டதாக தெரிவித்தார். திமுகவினர் தூண்டிவிடுவதாக சொல்வதைவிட்டு போராடும் மக்களை சமாதானப்படுத்துங்கள் என்று கூறிய அவர், திமுக எம்.பி.க்கள் தொடர்பாக அமைச்சர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் டியூப்லைட்டுடன் போராட்டம் நடத்தினால் மக்கள் அச்சமடையமாட்டார்களா என கேள்வி எழுப்பினார்..மேலும் எல்லா திட்டத்தையும் இப்படி எதிர்த்தால் எப்படி வளர்ச்சி திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வரும் என கேள்வி எழுப்பிய முதலமைச்சர், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண தமிழக எம்.பி.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். முடிவாக பேசிய சபாநாயகர் தனபால், அமைச்சர் விளக்கத்தின்போது அவை மரபை மீறி குறுக்கிட்டு பேசிய திமுக உறுப்பினர் செந்தில்பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்தார். திமுகவினர் போராட்டம் நடத்த தூண்டுவதாக அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்திய மு.க.ஸ்டாலின், செந்தில்பாலாஜி அவ்வாறு பேசியது தவறுதான் என்று தெரிவித்தார். இதன் பின்பு விவாதம் முடிவுக்கு வந்ததது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)