காதலனின் வெறிச்செயல்..! பெண் கொடூர கொலை

தூத்துக்குடி அருகே, வீட்டில் தனியாக இருந்த அனல்மின் நிலையப் பொறியாளர் மனைவியை, கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவத்தில், தேடப்பட்டு வந்த முன்னாள் காதலன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான். தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் நடேசன். இவர் உடன்குடி அடுத்த கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மகாராணி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து விசாரணை நடத்திய சிப்காட் போலீசார், மகாராணியுடன் நெருங்கிப் பழகி வந்ததாகக் கூறப்படும், இளவரசன் என்ற இளைஞன் மீது சந்தேகம் கொண்டு அவனைத் தேடி வந்தனர். இந்த நிலையில் தென்காசி நீதிமன்றத்தில் இளவரசன் சரண் அடைந்தான். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இளவரசனுக்கும் , மகாராணிக்கும் திருமணத்துக்கு முன்பிருந்தே பழக்கம் இருந்து வந்துள்ளது தெரியவந்தது. இந்த விவகாரம் தெரியவந்ததும் மகாராணியை கணவர் கண்டித்துள்ளார். இதையடுத்து தனது பழக்கத்தை மகாராணி முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இளவரசனின் செல்போன் அழைப்பை மகாராணி ஏற்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளவரசன் , சம்பவத்தன்று மகாராணியை நேரில் சந்தித்து பேச சென்றுள்ளான். மகாராணி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு, உள்ளே நுழைந்த அவர் மகாராணியிடம் பேசி அவரது மனதை மாற்ற முயன்றுள்ளான். ஆனால், மகாராணி பிடிவாதமாக இருந்ததால் ஆத்திரம் அடைந்த இளவரசன், தான் மறைத்து வைத்திருந்த பிளேடு கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி உள்ளான். மகாராணியின் வீட்டுக்கு இளவரசன் வந்து சென்றதைப் பார்த்தவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். செல்போன் அழைப்புகள் மற்றும் சிக்னல்களைக் கொண்டு கொலையாளி இளவரசன் தான் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் ஆண் நண்பர்களை வீட்டுக்குள் அழைத்துப் பேசுவதை தவிர்த்தாலே, இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என்று சுட்டிக்காட்டும் காவல் துறையினர், வீடு தேடி வரும் இதுபோன்ற வில்லன்களைத் தவிர்ப்பதும், ஏற்பதும் பெண்கள் கையில் மட்டுமே உள்ளது என்கின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)