சொகுசு கார் வழக்கில் நடராஜன் செலுத்திய பிணைத்தொகை ரூ.25 லட்சத்தை சசிகலா கேட்டால் திருப்பி தரப்படும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் நடராஜன் செலுத்திய ரூ.25 லட்சம் பிணைத்தொகையை அவரது மனைவி சசிகலா சிறையில் இருந்து வந்து கேட்கும் பட்சத்தில் அவரிடம் திருப்பி தரப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த 1994ம் ஆண்டு நியூ லெக்சஸ் எனப்படும் வெளிநாட்டு சொகுசு காரை 1993ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு பயன்படுத்திய கார் என தெரிவித்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்தார். இந்த சொகுசு கார் இறக்குமதி செய்ததில் அரசுக்கு ரூ1.62 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது சிபிஐ தரப்பில் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் பொருளாதார சிறப்பு நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு முறைகேடாக சொகுசு கார் வாங்கிய வழக்கில் நடராஜன் உட்பட 4 பேருக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடராஜன் உட்பட நான்கு பேருக்கும் எழும்பூர் பொருளாதார சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டு சிறை தண்டனையை மீண்டும் உறுதி செய்தது. அப்போது உடல்நிலையை காரணம் காட்டி நடராஜன் தரப்பில் மட்டும் சரணடைய கால அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து நிராகரித்து விட்டது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மேற்கண்ட வழக்கில் சரணடைவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என நடராஜன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முதலில் மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், பின்பு அவசர வழக்காக எடுத்து விசாரித்து வழக்கில் சரணடைய நடராஜனுக்கு விலக்கு அளித்தது. இதையடுத்து அவர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வீல்கர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடராஜன் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் சத்தியசீலன் வாதத்தில், சொகுசு கார் வழக்கு விவகாரத்தில் நடராஜன் தரப்பில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ள பிணைத்தொகை ரூ.25 லட்சத்தை திருப்பி அளிக்குமாறு கேட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அவரது நாமினியாக இருப்பவர் கேட்டால் தரப்படும் என்றார். அவரது மனைவி சசிகலா உள்ளார். ஆனால் தற்போது பெங்களூரு சிறையில் இருக்கிறார் என வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், “சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட நடராஜன் காலமாகி விட்டார். இருப்பினும் அவரது மனைவி சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் கணவர் செலுத்திய ரூ.25லட்சம் பிணைத்தொகையை மனுவாக அளித்து கேட்டால் திருப்பி கொடுக்கப்படும். அதுவரை அந்த பணம் நீதிமன்றத்தின் வைப்புநிதி கணக்கில் இருக்கும்'' என உத்தரவிட்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்