ஊதியம் கேட்டு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மாதச் சம்பளம் இன்னும் வழங்காததால், இன்று சுமார் 3500 பேருந்துகள் இயங்கவில்லை. சென்னை மாநகரப்போக்குவரத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு, மாத இறுதியில் ஊதியம் வழங்கப்படும். ஆனால், கடந்த மாத ஊதியம் இன்னும் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை . இதனால், இன்று காலை முதல் பேருந்தை இயக்க ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மறுத்துவிட்டனர்.சென்னை மாநகரில் சுமார் 3500 பேருந்துகள் இயங்கவில்லை . அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் திருமங்கலம் ஆகிய பணிமனைகளில் இருந்து 850 பேருந்துகள் இயங்கவில்லை வாரத்தின் முதல் நாள் இன்று இயல்பாக பணிக்கு செல்லவேண்டிய பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போக்குவரத்து ஊழியர்கள் அனைத்து பணிமனைகளிலும் பேருந்துகளை வெளியே எடுக்காமல் ஊழியர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்போக்குவரத்துக்கழக அதிகாரிகள் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை . மொத்த சம்பளத்தில் 62% தான் தற்போது தரப்படும் என்று அதிகாரிகள் கூறியதாகவும், ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பேருந்துகள் இயங்காததால் அசோக் பில்லர், கிண்டி ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.ஊதியம் வழங்காததை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேருந்துகள் ஓடாததால் பொதுமக்கள் மின்சார ரயில்களை நோக்கி படையெடுக்கத்தொடங்கினர். இதனால், மின்சார ரயில்களில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை ஊதிய உயர்வு கேட்டு போராடிய போக்குவரத்து ஊழியர்கள், தற்போது ஊதியம் கேட்டு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.