'ஊபா' கொடுஞ்சட்டம் என்ன செய்யும்?

இந்த சட்ட திருத்த மசோதாவால் என்ன பின் விளைவு ஏற்படும் என்ற கேள்விக்கு, கடந்த காலங்களில் 'ஊபா'வால் ஏற்பட்ட பாதிப்புகளும்்ஒடுக்குமுறையையும் சாட்சியங்களாக பட்டியலிட்டாலே இச்சட்டத்தின் கொடூரத்தன்மையை புரிந்து கொள்ளலாம். சாட்சியம் -1 ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்று ஊடகம். அத்தகைய ஊடகவியலாளர் 'ஊபா' சட்டத்தால் எப்படி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை பார்த்தாலே இச்சட்டம் எவ்வளவு கொடுஞ்சட்டம் என்பது புரியும். கேரளாவைச்சார்ந்தவர் கே.கே.ஷாஹினா நஃபீஷா.இவர் தெகல்கா பத்திரிகையின் புலனாய்வு செய்தியாளர். கடந்த 2008 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் கேரளாவைச் சார்ந்த அரசியல் தலைவர் மதானி கைது செய்யப்படுகிறார். இந்த வழக்கில் மதானிக்கு எதிராக 10 சாட்சியங்களை பெங்களூர் காவல்துறை அடையாளம் காட்டியது. வழக்கு விறு விறுவென ஓடிக்கொண்டிருந்த வழக்கில் திருப்பமாக வந்து சேர்ந்தார் தெகல்கா செய்தியாளர் ஷாகினா. மதானிக்கு எதிராக போலீசார் நிறுத்திய 10 சாட்சியர்களில் 5 பேரை ஷாகினா ரகசிய கேமராக்களில் பேட்டி எடுத்தார். அப்போது சாட்சியமாக அடையாளம் காட்டப்பட்டவர்கள், “மதானி யார் என்றே தெரியாது”என்றும் “நானா சாட்சி “என்றும் தெரிவித்தனர் இதையெல்லாம் தொகுத்து "இந்த மனிதர் எதற்காக சிறையில் இருக்கிறார்?" என்னும் தலைப்பில் 'கவர் ஸ்டோரி'வெளியிட்டார். அரசுக்கு எதிராகவும் திவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக குற்றம் சுமத்தி 2011 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் ஷாகினா கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.எந்த வழக்கில் ஷாஹினா கைது செய்யப்பட்டார் தெரியுமா? பயங்கரவாதிகள் தடுப்புச்சட்டமான 'ஊபா' சட்டத்தில் தான். ஒரு ஊடகவியலாளரை பொது சமூகத்திலும் சட்டத்தின் முன்னும் பயங்கரவாதியாகத்தான் இந்த சடடம் முன்னிறுத்துகிறது. நல்லவேளையாக அன்றைக்கு ஊடகவியலாளருக்கு ஆதரவாக சனநாயகவாதிகளும் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் 'ரிமாண்டு'செய்யாமல் விசாரணைக்கு மட்டும் உட்படுத்தினர்.கைது நடவடிக்கையிலிருந்து முன்ஜாமீன் பெற்றுதுடன் செஷன்ஸ் கோர்ட் வழக்கை நடத்துவத்திலிருந்து உயர்நீதிமன்றத்தில் தடையாணையும் பெற்றுள்ளார். ஆனாலும் பாவம் ஷாகினா கோர்ட்டு கேசுமாக அலைந்து வருகிறார். இன்னமும் வழக்கு முடிந்த பாடில்லை. சாட்சியம் -2 'பீமா கோரேகான் - இந்த பெயர் மகாராஷ்டர தலித் மக்களிடையே மிகப்பெரும் எழுச்சியை உருவாக்கிய வினைச்சொல். இந்தியாவாக இல்லாத காலத்தில் பிரிட்டிசார் ஒவ்வொரு பகுதியாக படையெடுத்து கைப்பற்றி வந்து கொண்டிருந்தனர். அன்றைய மகாராஷ்ரத்தை பேஷ்வா என்ற சமூகத்தினர் ஆட்சி புரிந்து வந்தனர். மகாராஷ்டிரத்தை பிரிட்டிசார் கைப்பற்ற பேஷவா படையோடு மோதினர். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அப்போது பிரிட்டிசார் 'மகர் ரெஜிமென்ட்'என்னும் படையை துணைக்கு அழைத்துக் கொண்டு பேஷ்வாக்களோடு மோதினர். மகர் படை போஷ்வா படையை ஓட ஓட விரட்டியது. மும்பையின் பீமா கரையோரம் பேஷ்வா படை தோற்க்கடிக்கப்பட்டது. 'பேஷ்வா சமூகம் உயர்சாதியான பார்ப்பன சமூகத்தை, தாழ்த்தப்பட்ட சமூகமான மகர்கள் வெற்றி கண்ட நாள் தான் சனவரி 1. கடந்த 2018 அன்று மகர்கள் வெற்றி கண்ட 200 வது ஆண்டு. மகர்களின் வெற்றியை கொண்டாடும் வகையில் 'பீமா கோரேகான்' என்னும் இடத்தில் தலித்துகள் லட்சக்கணக்கில் ஒன்று கூடி 'ஜெய் பீம்' ஜெய் பீம்' என்னும் விடுதலை முழக்கத்தை எழுப்பி அதிர வைத்தனர். அப்போது இந்து மகா சபையைச்சார்ந்தவர்கள் ஆயுதங்களோடு புகுந்து தலித்துகளை தாக்கினர். மும்பை முழுக்க கலவரம் வெடித்து. இந்த வழக்கில் கலவரத்தை நடத்திய இந்து மகா சபையினர் ஒருவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான தலித்துகள் கைது செய்யப்பட்டனர். தலித்துகளுக்கு ஆதரவாக இருந்த முக்கியமான ஆளுமைகள் 9 பேர் இந்த கலவரத்தின் பின்னாக 'ஊபா' வழக்கில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமான தலைவர், சுதிர் சுவாலே.இவர் 'ரிபப்ளிக்கன் பேந்தர்ஸ்'என்னும் அமைப்பின் தலைவர். இவர் தலித்களின் எழுச்சசிக்கு காரணமாக இருந்தார் என்பதால், 'ஊபா' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே தலித்துகள் விடுதலைக்காக போராடினார் என்பதற்காக 40 மாதங்களுக்கும் மேலாக ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து பிணையில் வந்தார். வந்தவரை ஜூன் 6,2018 ஆம் ஆண்டு மீண்டும் 'ஊபா' சட்டத்தில் கைது செய்யப்பட்டு இன்னமும் சிறையிலிருக்கிறார். இவரோடு சேர்ந்து பீமா கோரேகன் கலவரம் தொடர்பாக, வழக்கறிஞர் சுரேந்திரா காட்லிங் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கைதுக்கு காரணம் என்ன தெரியுமா? ஊபா சட்டடத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் சுதிர் தவாலேவுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்காடியதற்காகவே ஊபா சட்டத்தில் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே போல வழக்கறிஞர் அருண் பெரேராவும் 'ஊபா' சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் ஆஜரானதற்காக ஊபா சட்டத்திலேயே கைது செய்யப்பட்டு இன்னமும் சிறையிலிருக்கிறார். மேலும் சமூக செயற்பாட்டாளர் மகேஷ் ராவுத், நாக்பூர் பல்கலைக்கழக பேரா.சோமா சென், அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழுவின் தலைவர் ரோனா வில்சன் ஆகியோரும் ஊபாவில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கோடு தொடர்புடைய மேலும் நான்கு பேர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாகவும் தீவிரவாதத்தை ஆதரித்ததாகவும் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அதில் முக்கியமானவர் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் தொழிற்சங்கத்தலைவராகவும் தேசிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.இவரோடு சேர்ந்து ஆந்திர எழுத்தாளர் வரவர ராவ், பொருளாதார பேராசிரியர் வெர்னான் கான்சல்வேஸ் ஆகியோரும் ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு இன்னமும் பிணை கிடைக்காமல் சிறையிலேயே இருக்கின்றனர். இதுவரை 60 முறை பிணைக்கான மனு போட்டும் பிணை கிடைத்தபாடில்லை. அந்தளவுக்கு 'ஊபா' அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக உள்ளது. சாட்சியம்- 3. தில்லி பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றிய சாய்பாபா என்பவரது இல்லத்தில் திடுமென NIA அதிகாரிகள் சோதனையிட்டனர். வீட்டில் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் விதமாக புத்தகங்களும் ஆவணங்களும் இருந்ததாக குற்றம் சுமத்தி 'ஊபா' சட்டத்தில் 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின், உத்தரகாண்ட் மாநிலத்தை சார்ந்த பத்திரிக்கையாளர் பிரசாந்த் ராஹி, ஜே.என்.யூ மாணவர் ஹேம் மிஸ்ரா, மஹாராஷ்டிரா காட்சிரோலி பகுதியில் வசிக்கும் பழங்குடிகளுக்காக போராடும் மகேஷ் திர்கி, பாண்டு நரோடே,விஜய் திர்கி ஆகியோரும் மாவோக்களோடு தொடர்பு இருப்பதாக சொல்லி ஊபாவில் சிறைப்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் விஜய் திர்கிக்கு மட்டும் பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் மற்ற ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இன்னமும் சிறையில் தான் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், பேராசிரியர் சாய்பாபா வீல் சேரில் தான் நடமாடவே முடியும். 90 சதவீதம் உடல் உறுப்புகள் வேலை செய்யவில்லை. அப்படி செயல்பட முடியாத ஒருவர் இந்த தேசத்துக்கு ஆபத்தை விளைவிக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டு ஊபா சட்டம் தண்டனை வாங்கித்தந்தது தான் ஊபாவின் சோகம். அதனால் தான் இந்த கொடுஞ்சட்டம் வேண்டாம் என்று போராடுகிறோம். - வன்னி அரசு, விசிக


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்