மாற்று திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று திரும்பிய திருச்சி வீராங்கனை ஜெனிதா பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது என்றார்.
ஏர்போர்ட்: சுலோவாக்கியா நாட்டில் நடந்த மாற்று திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று திரும்பிய திருச்சி வீராங்கனை ஜெனிதா பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது என்றார். உலக மாற்று திறனாளி தனிநபர் 19வது செஸ் போட்டி, சுலோவாக்கியா நாட்டில் ரூசோம்பர்க் என்ற நகரில் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் 13 நாடுகளை சேர்ந்த 44 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பாக திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த கே.ஜெனித்தா ஆண்டோ கலந்து கொண்டார். பல்வேறு சுற்றுகளில் தொடர்ந்து முன்னேறிய அவர் இறுதி போட்டியில் ரஷ்ய வீராங்கனையுடன் மோதினார். அவருடன் சிறப்பாக விளையாடிய ஜெனிதா அவரை தோற்கடித்து தங்கம் வென்றார். உலக போட்டியில், பெண்கள் பிரிவில் 6வது முறையாக தங்கம் வென்று ஜெனிதா சாதனை படைத்துள்ளார். உலக போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்ற ஜெனிதா இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்க மங்கை ஜெனிதாவிற்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் பாராட்டினர். அவரை வரவேற்க வந்த விளையாட்டு மாணவர்கள் கைகளை தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஜெனிதா கூறுகையில், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது லட்சியம் என்றார்.